இஸ்தானா நோக்கி அனுமதி பெறாமல் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஊர்வலமாகச் செல்ல ஏற்பாடு செய்ததாக மூன்று பெண்கள்மீது ஜூன் மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களில் ஒருவருக்கு டிசம்பர் 5ஆம் தேதிக்கும் அம்மாதம் 7ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பாத்தாம் தீவுக்குச் செல்ல அனுமதி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியத் தீவுக்கு இளைப்பாறச் செல்லயிருப்பதால், சிங்கப்பூரைவிட்டு வெளியேற அனுமதி வழங்கும்படி 29 வயது சித்தி அமிரா முகம்மது அஸ்ரோரி சமர்ப்பித்த மனுவை நீதிபதி பிரெண்டா டான் விசாரித்தார்.
அனுமதி வழங்கியதுடன், கூடுதலாக $8,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் சித்திக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், விசாரணை அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டுமெனவும் கடப்பிதழைச் சிங்கப்பூருக்குத் திரும்பிய 24 மணி நேரத்திற்குள் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது.
சித்தி உட்பட 25 வயது மொசாம்மாட் சொபிக்குன் நஹார், 36 வயது அண்ணாமலை கோகிலா பார்வதி ஆகிய மூவரும் இஸ்தானா அருகில் இவ்வாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி ஏற்பாடு செய்த ஊர்வலம் நடந்ததாகக் கூறப்பட்டது.
பொது ஒழுங்குச் சட்டத்தின்கீழ் அந்த மூன்று சிங்கப்பூர் பெண்களும் தலா ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர்.