தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாக வாடகை கார் சேவை: மூன்று மாதத்தில் 102 வாகனங்கள் பறிமுதல்

2 mins read
a966cde3-4eea-4def-a147-0cfb5de50e94
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தகுந்த உரிமங்கள் இல்லை. - படம்: மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்

கடந்த ஜூலை மாதம் முதல் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வாடகை கார் சேவை வழங்கப் பயன்படுத்தப்பட்ட 102 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகவலைப் போக்குவரத்திற்கான மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) பதிவிட்டார்.

102 வாகனங்களில் வியாழக்கிழமை (அக்டோபர் 2) நிலப் போக்குவரத்து ஆணையம் பறிமுதல் செய்த 10 வாகனங்களும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளூரில் மட்டுமல்லாது எல்லை கடந்தும் வாகனச் சேவைகளை வழங்கியுள்ளன என்று திருவாட்டி ஷுவெலிங் தமது பதிவில் குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தகுந்த உரிமங்கள் இல்லை. அதில் செல்லும் பயணிகளுக்குக் காப்புறுதி வாங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரிலும் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கும் சட்டவிரோதமாக வாகனச் சேவைகளை வழங்குவோர்களைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாகவும் திருவாட்டி ஷுவெலிங் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக வாகனச் சேவைகளில் ஈடுபட்ட 136 ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர்.

கடந்த வாரம் சட்ட விரோதமாக எல்லை கடந்த வாடகை கார் சேவை வழங்கிய ஓட்டுநர்கள் எட்டுப் பேர் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் செப்டம்பர் 30ஆம் தேதி தகவல் வெளியிட்டது. அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் டாக்சி அல்லது தனியார் வாடகை வாகனச் சேவை வழங்க விரும்புபவர்கள் பொதுச் சேவை வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் மலேசியப் பதிவு எண் கொண்ட டாக்சிகள் ஆசியான் பொதுச் சேவை வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு உரிமங்களும் நிலப் போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் கம்ஃபர்ட் டெல்குரோ, ஸ்டிரைட்ஸ் பிரிமியர் டாக்சி நிறுவனமும் வாடகை கார் சேவை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்