லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள வீடுகளை ‘ஏர்பிஎன்பி’ தளத்தின் மூலம் குறுகியகால வாடகைக்கு விட்ட பெண்ணுக்கு S$175,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மே 25ஆம் தேதி அவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான 52 வயது ஜெயந்தி பொன்னுசாமி மணியன், கிந்தா ரோட்டில் உள்ள மூன்று வீடுகளைச் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டதன்மூலம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் S$162,000 வருவாய் ஈட்டியதாகக் கூறப்பட்டது.
2019 ஜூன் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடையே 489 முறை ஜெயந்தி அந்த வீடுகளை வாடகைக்கு விட்டார்.
2021ஆம் ஆண்டு இறுதியில், சிங்கப்பூரில் குறுகிய காலத்திற்கு வீடுகளை வாடகைக்கு விடுவது சட்டவிரோதம் என்று ‘ஏர்பிஎன்பி’ தளம் ஜெயந்தியிடம் கூறியது. அதன்பிறகு ஜெயந்தி அவ்வாறு செய்வதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார்.
குடியிருக்கும் வீட்டை அனுமதியின்றி குறுகியகால வாடகைக்கு விட்டதன் தொடர்பில் திட்டமிடல் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது மூன்றாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.
சட்டவிரோதமாக குறுகிய காலத்திற்கு வீட்டை வாடகைக்கு விட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல்முறை தவறு செய்தவருக்கு 200,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
தண்ணீர், மின்சாரம், குப்பை அகற்றும் சேவை ஆகியவற்றுக்கான கட்டணங்களுக்காக S$32,700 கழித்துக்கொள்ள நீதிபதி அனுமதி வழங்கினார். ‘ஏர்பிஎன்பி’ தெரிவித்ததும் ஜெயந்தி அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டதை அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அபராதத்தைச் செலுத்தாவிட்டால் ஜெயந்தி எட்டு மாதச் சிறைத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.