சட்டவிரோத வாகனச் சேவைகளை வழங்கிய 12 ஓட்டுநர்கள் சாங்கி விமான நிலையத்தில் புதன்கிழமையன்று (டிசம்பர் 18) பிடிபட்டனர்.
நிலப் போக்குவரத்து ஆணையம் அவர்களைப் பிடித்தது. அந்த ஓட்டுநர்கள் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே சட்டவிரோதமாகப் பயணிகளை அழைத்து வந்ததாக ஆணையம் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது அந்த ஓட்டுநர்கள் சிங்கப்பூருக்குள்ளேயும் அச்சேவைகளை வழங்கி வந்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
எல்லை தாண்டி பயணிகளை அழைத்துச் செல்வதற்குத் தேவையான பொதுச் சேவை வாகன உரிமம் (PSVL) பிடிபட்ட ஓட்டுநர்களிடம் இல்லை என்றும் ஆணையம் தெரிவித்தது. வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட அவர்களின் வாகனங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தகைய சட்டவிரோதமான பயணச் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
தானும் மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பும் அங்கீகரிக்கும் சிங்கப்பூர், மலேசிய டாக்சிகள் மட்டுமே எல்லை தாண்டி பயணிகளைக் கொண்டு செல்ல முடியும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறப்பிட்டது. மலேசிய டாக்சிகளிடம் பொதுச் சேவை வாகன உரிமம் மட்டுமின்றி ஆசியான் பொதுச் சேவை வாகன உரிமமும் இருக்க வேண்டும்.
தகுந்த உரிமம் உள்ள மலேசிய டாக்சிகள், ரோச்சோரில் உள்ள பான் சான் ஸ்திரீட் முனையத்தில் மட்டும்தான் பயணிகளை ஏற்றிச் செல்லலாம் அல்லது இறக்கிவிடலாம்.
அந்த டாக்சிகள் சிங்கப்பூருக்குள் அச்சேவைகளை வழங்கக்கூடாது. உள்ளூர் டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் சம்பாதிக்க நியாயமான சூழலை உருவாக்கித் தரும் நோக்கில் அந்த விதிமுறை நடப்பில் இருப்பதாக போக்குவரத்து அமைச்சும் நிலப் போக்குவரத்து ஆணையமும் குறிப்பிட்டன. வாசகர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் பிரிவுக்கு சமர்ப்பித்த கடிதத்துக்கு அவை பதில் அளித்தன.
சட்டவிரோதமாக அத்தகைய சேவைகளை வழங்குவோருக்கு மூவாயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பிடிபடும் ஓட்டுநர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

