சிங்கப்பூரில் நாய் இறைச்சி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் புகார் குறித்துச் சிங்கப்பூர் உணவு அமைப்பு விசாரணை மேற்கொண்டுள்ளது.
‘டாக்ஸ் சிங்கப்பூர்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட படமொன்றில், வியட்னாமிய மொழியில் நாய் இறைச்சியின் பல்வேறு பாகங்கள் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் இடம்பெற்றிருந்தது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) காலை அப்பக்கத்தில் அப்படம் அடங்கிய பதிவு நீக்கப்பட்டுவிட்டது தெரியவந்தது.
நாய் இறைச்சியை எந்த வடிவத்திலும் இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு சிஎன்ஏ-விடம் கூறியது.
சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்படும் அனைத்து உணவுப் பொருள்களும் உணவு அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அடையாளம் தெரியாத இடங்களிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் உணவுகள் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று அமைப்பு சுட்டியது.
உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே இறைச்சிப் பொருள்களை இறக்குமதி செய்ய முடியும். அவை சிங்கப்பூர் உணவு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களிலிருந்து மட்டுமே கொண்டுவரப்பட வேண்டும். முறையான உரிமம் அல்லது அனுமதி இன்றி இறைச்சிப் பொருள்களை விற்பனை செய்வது குற்றமாகும்.
சட்டவிரோதமாக இறைச்சியை இறக்குமதி செய்து விற்பனை செய்வோருக்கு அதிகபட்சமாக $50,000 அபராதம், ஈராண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் தவறிழைப்போருக்கு $100,000 வரையிலான அபராதம், மூவாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.
