சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதியில் சட்டவிரோத நேரலைச் சாதனங்களை (streaming devices) விற்ற கடை உரிமையாளர் ஒருவர், பதிப்புரிமை விதிமுறைகளை மீறியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேபோன்ற விவகாரத்தில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், வேறொரு கடை உரிமையாளரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. கெ ஸின் எனும் அந்த 37 வயது ஆடவருக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எம்டி கேட்ஜெட்+, கிராண்ட்நியூ எனும் அவரின் இரு கடைகளுக்கும் 200,000 வெள்ளி, 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இப்போது வாங் இயூ எனும் 36 வயது ஆடவர் வியாழக்கிழமை (மார்ச் 20) நீதிமன்றத்தில் முன்னிலையானார். சீனாவைச் சேர்ந்த இவர், ஏஸ் டெக்னாலஸ்ஜீஸ் எனும் நிறுவனத்துடன் தொடர்புடைய மேலும் 17 பதிப்புரிமை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
வாங் இயூ, அந்நிறுவனத்தைத் தொடங்கி அதற்கு உரிமையாளராக இருந்தார்.
ஏஸ் டெக்னாலஸ்ஜிஸ், கடந்த 2018லிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சிம் லிம் ஸ்குவேரில் நான்கு கடைப் பகுதிகளில் செயல்பட்டுவந்ததாக துணை அரசாங்க வழக்கறிஞர் ஜானத்தன் டான் தெரிவித்தார்.

