சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, அதிகாரபூர்வ உரிமம் இன்றி சட்டவிரோதமாக பயணச் சேவைகளை வழங்கிய குற்றத்துக்காக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையமும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் இணைந்து உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரு நிலவழி எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டன.
கடந்த மே 4ஆம் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட டாக்சிகள் சிங்கப்பூரின் எல்லாப் பகுதியிலும் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உள்நாட்டுப் போக்குவரத்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்தத் தொடர் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை 3,900க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, விதிமுறைகளை மீறிய 199 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விரைவில் ஜூன் மாதப் பள்ளி விடுமுறைக்காலம் தொடங்கவுள்ளதால், பொதுமக்கள் தங்களது பயணங்களின்போது அதிகாரபூர்வ உரிமம் பெற்ற போக்குவரத்து நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்திப் பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

