சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம்: தேசிய பூங்காக் கழகம்

சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம்: தேசிய பூங்காக் கழகம்

2 mins read
e53aa2d0-8e3e-4431-bca6-6bf99b6a09c4
இணைய உரையாடலில் விற்பனையாளர் ஒருவர் புலிப் பற்கள், நகங்கள் போன்றவற்றை விற்பனைக்கு விடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்
multi-img1 of 4

சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டுகளாக சட்டவிரோத வனவிலங்குகளுக்கான வர்த்தகம் பொதுவாக ரகசியமாய் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருகிவரும் விலங்குகளின் உடல்பாகங்களைக் கொண்டு மருந்துகள் அல்லது தாயத்துகளை விற்ற கடைகளில் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதே அதற்குக் காரணம்.

இருப்பினும், வனவிலங்குகள், விலங்குகளின் உடல்பாகங்கள் ஆகியவற்றின் தொடர்பில் நடத்தப்படும் சட்டவிரோத வர்த்தகம் மெய்நிகர் உலகில் தொடர்ந்து காணப்படுவதாக சென்ற வாரம், அடையாளம் தெரிவிக்க விரும்பாத ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

ஜூலை மாத இறுதியில் அருகிவரும் விலங்குகளின் 20க்கும் மேற்பட்ட உடல்பாகங்களை விற்க முயன்ற ஒருவரிடமிருந்து ‘வாட்ஸ்அப்’இல் செய்தி கிடைத்ததாக அவர் சொன்னார்.

அந்த விற்பனையாளர் புலித்தோல், பற்கள், நகங்கள் போன்றவற்றின் படங்களை அவரிடம் காட்டினார். விற்பனையாளரிடம் கரடியின் பற்களும், காட்டுப் பன்றியின் தந்தங்களும் இருந்தன.

உள்ளங்கை அளவில் உள்ள ஒரு புலித்தோலுக்கு அவர் $200 கேட்டிருந்தார். அவருக்கு அந்த ஆடவரை ஆறு ஆண்டுகள் ‘வாட்ஸ்அப்’இல் தெரியும். அத்தகைய பொருள்கள் வழக்கமாக உடனடியாய் விற்று முடிந்துவிடும் என்று கூறிய அந்த விற்பனையாளர், சுற்றுப்புறத்துக்கு எவ்விதக் கேடும் அபாயமும் இல்லை என்று ஆடவரிடம் உறுதிகூறினார்.

அதிகாரிகளிடம் பிடிபட்டால், அந்த விலங்குப் பாகங்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் பெறப்பட்டவை என்று அவர்களிடம் கூறும்படி அந்த விற்பனையாளர் ஆடவரிடம் சொன்னார். அந்த ஆடவர் அப்பொருள்களை வாங்க மறுத்துவிட்டார்.

தேசிய பூங்காக் கழகம் கடைகளையும் இணையச் சந்தையிடங்களையும் அடிக்கடி கண்காணிப்பதாகவும், அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியது.

சட்டவிரோத வினவிலங்கு வர்த்தகம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் cites@nparks.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரியில் தேசிய பூங்காக் கழகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்