சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய இணையச்சேவை பிரிவின் மூலம் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் முறைகேடாக அவர்களின் வீட்டு முகவரிகளை மாற்றியதன் தொடர்பில் மேலும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 11ஆம் தேதிக்கும் 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுவர் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டதாகவும் தற்போது மேலும் அறுவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருப்பதாகவும் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தீவு முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் அறுவரில் ஐந்து ஆடவர்களும் ஒரு மாதும் அடங்குவர். அவர்கள் அனைவரும் 17 வயதிற்கும் 38 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.
கைதான 13 பேருக்கும் முறைகேடாக முகவரியை மாற்ற முயற்சித்த வழக்குகளில் குறைந்தது 66 சம்பவங்களில் தொடர்பிருப்பதாக நம்பப்படுவதாக காவல்துறை கூறியது.
விசாரணை தொடர்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.