1,300 பொட்டலங்களில் கள்ள சிகரெட்டுகள்: 40 வயது ஆடவர் கைது

1,300 பொட்டலங்களில் கள்ள சிகரெட்டுகள்: 40 வயது ஆடவர் கைது

1 mins read
காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொட்டலங்கள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டன
77837015-b095-455b-8467-a0e9f559dcd3
ஏப்ரல் 2ஆம் தேதி நடத்திய சோதனையில் அதிகாரிகள் அந்த ஆடவரைக் கைது செய்தனர். - படங்கள்: குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்/ஃபேஸ்புக் காணொளி/ஏஷியாஒன்.காம்

தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற சிங்கப்பூர் ஆடவர் ஒருவர், ஏப்ரல் 2ஆம் தேதி, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டார்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாடகை காரில் அந்த 40 வயது ஆடவர் அவற்றை மறைத்து வைத்துக் கடத்த முயன்றதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

‘ஐடிசி’ எனப்படும் ஆணையத்தின் ஒருங்கிணைந்த தரவு ஆய்வு நிலையம் அளித்த உளவுத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அவரது காரைச் சோதனையிட்டனர். வாரத்தின் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ‘ஐடிசி’ நிலையம், பயணிகள் அல்லது சரக்குகள் சோதனைச் சாவடிகளை வந்தடைவதற்கு முன்பே இத்தகைய கடத்தல் முயற்சிகளை அடையாளம் காண முயல்கிறது.

சோதனையில் 1,300க்கும் அதிகமான பொட்டலங்களிலும் 217 பெட்டிகளிலும் இருந்த கள்ள சிகரெட்டுகளை அவர்கள் கண்டுபிடித்தனர். அவை அந்த காரின் பின்புறத்திலும் கதவுகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்பில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரையும் பிடிபட்ட பொருள்களையும் மேல்விசாரணைக்காகச் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்