ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், எக்ஸ், யூடியூப் ஆகிய சமூக ஊடகத் தளங்கள், வயதைப் பொய்யாகக் குறிப்பிடும் இளம் பயனர்களைக் கண்டுபிடிப்பதில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை மதிப்பிடுவதற்காக மர்ம வாடிக்கையாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்ட குத்தகை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 13. அதனைச் சமூக ஊடகத் தளங்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதற்காக, 2027ல் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டத்தை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
13 வயதிற்குக்கீழ் உள்ள சிறார் கணக்குகளைத் தொடங்கவோ வைத்திருக்கவோ முடியாது என்பதைக் குறிப்பிட்ட சமூக ஊடகச் சேவைகள் உறுதிசெய்ய வேண்டும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு கடந்த செப்டம்பரில் தெரிவித்திருந்தது.
13 முதல் 17 வயதுக்குட்பட்ட பயனர்களைப் பொறுத்தவரை, அந்நியர்களிடமிருந்து வரும் நேரடிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது, பதின்ம வயதினர் ஒரு தளத்தில் செலவிடும் நேரத்திற்கு அன்றாட வரம்பை நிர்ணயிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தளங்கள் கொண்டிருப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்ற தேசிய தினக் கூட்ட உரையின்போது அந்தச் சட்டம் குறித்து முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டது. அதில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், வயது அடிப்படையிலான அனுமதியை நடைமுறைப்படுத்தாத சமூக ஊடகத் தளங்களுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பு 13க்கு மேல் உயர்த்தப்படலாம் என்று கூறியிருந்தார்.
அடிமைத்தனம், சமூகத் தனிமைப்படுத்தல், ஆரோக்கியமற்ற ஒப்பீடுகள் போன்ற சமூக ஊடகத் தீமைகளிலிருந்து இளையோரைப் பாதுகாக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாடும் பல நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
இந்நிலையில், குறைந்தபட்சம் 170 போலிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என்று அக்குத்தகை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் வயதைப் பொய்யாகக் கூறிய குழந்தைகளின் இணையப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, ஆறு வாரங்களுக்கு மர்ம வாடிக்கையாளர்கள் அந்தக் கணக்குகளைப் பயன்படுத்துவர்.
வயதுகுறைந்த பயனர்களைத் தளங்களால் கண்டறிந்து தடுக்க முடிகிறதா, வயது குறைந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரிடம் வயதைச் சரிபார்க்குமாறு கேட்கப்படுகிறதா, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு வலுவான பாதுகாப்புகள் நடைமுறையில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க, தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் அந்தக் கணக்குகளைத் தொடங்க வேண்டும்.
நவம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்தக் குத்தகை ஆவணங்களில், சமூக ஊடகத் தளங்களின் வயது கணிப்பு முறைகள் குறித்த சுயேச்சை மதிப்பீட்டை ஆணையத்திடம் வழங்குவதே ஆய்வின் நோக்கம் என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளை மேம்பட்ட முறையில் பாதுகாக்க, சமூக ஊடகங்களின் வயதுச் சரிபார்ப்பு விதிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தும் தனது திட்டங்களுக்கு அந்த ஆய்வு ஆதரவளிக்கும் என்று ஆணையம் குத்தகை ஆவணங்களில் தெரிவித்துள்ளது.
