இணையவழி துன்புறுத்தலுக்கு ஆளாவோர் அரசாங்க அமைப்பிடமிருந்து உடனடியாக உதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதன்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கேதுவாக இணையவாசிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படுகிறது.
ஆணையம் அமைக்கப்படுவது தொடர்பான விவரங்களை இணையவாசிகள் பாதுகாப்பு (நிவாரணம் மற்றும் பொறுப்பேற்பு) மசோதா விவரிக்கிறது.
அத்துடன், துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை எதிர்கொள்ள உள்ளடக்கத் தொடர்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் தளங்களுக்கு உள்ள பொறுப்புகளை அது எடுத்துக்கூறுகிறது.
இணையம்வழி தொல்லை விளைவித்தல், இணையம்வழி விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து துன்புறுத்துவது தொடர்பான விவகாரங்களுக்கும் இது பொருந்தும்.
கடமை தவறும் தனிமனிதர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். கடமை தவறும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு $500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இணையவாசிகள் பாதுகாப்பு ஆணையம் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இயங்கத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆணையத்துக்குத் தலைமை தாங்கும் ஆணையர் ஒருவரைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு நியமனம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி துன்புறுத்தல்கள் அடங்கிய பட்டியலில் 13 வகை துன்புறுத்தல்களை ஆணையம் எதிர்கொள்ளும்.
இணையம்வழி தொல்லை விளைவித்தல், இணையம்வழி விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து துன்புறுத்துவது, பிறருடன் நெருக்கமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் பரப்புவது, சிறுவர்களை முறையற்ற வகையில் படமெடுத்து இணையத்தில் பரப்புவது ஆகியவற்றில் முதலில் கவனம் செலுத்தப்படும்.
மேலும் எட்டு வகை இணையம் வழி துன்புறுத்தல்களை ஆணையம் படிப்படியாக எதிர்கொள்ளும். இணையவழி ஆள்மாறாட்டம், வன்போலி (deepfake) மூலம் துன்புறுத்தல், இணையம்வழி வன்முறையைத் தூண்டிவிடுதல், போலிப் பதிவுகளைப் பதிவிடுதல் போன்றவை அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே இணையவாசிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உதவியைப் பெறலாம். சிங்கப்பூருடன் பரிந்துரைக்கப்பட்ட தொடர்புடையோரும் ஆணையத்திடமிருந்து உதவி பெறலாம்.
இந்த மசோதா தனிநபர்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறியதற்காக உள்ளடக்கம் தொடர்பாளர்கள், நிர்வாகிகள், தளங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க ஒரு புதிய சட்ட அடிப்படையை வழங்குகிறது.
இழப்பீடு, தடை உத்தரவு போன்றவற்றையும் நீதிமன்றம் வழங்க முடியும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் சட்ட அமைச்சும் ஆகியவை தெரிவித்துள்ளன.
இணையத்தில் அடையாளம் தெரியாது எனும் தைரியத்தால் செயல்படும் இணையம் வழி தீங்கு விளைவிப்போரை அடையாளம் காணவும் பொறுப்பேற்கச் செய்யவும் முடியும் என்பதை புதிய நடவடிக்கைகள் உறுதிப்படுத்தும்.