வேலை, கல்வி, காதல் போன்ற காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்த சிலர் இப்போது குடிமக்களாக உருவெடுத்திருக்கின்றனர்.
பலர் புதுக் குடிமக்களாக மாறும் போக்கு தொடரவிருக்கிறது. சமூக அம்சங்களைப் பொறுத்து அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் 25,000லிருந்து 30,000 பேருக்குப் புதிதாகக் குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
பெரிதும் குறைந்துள்ள பிறப்பு விகிதத்தைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரின் புதுக் குடிமக்கள் நால்வர் தங்களின் அனுபவங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் பகிர்ந்துகொண்டனர்.
ஹர்மிஸ் ஷிக்கா
அல்பேனியாவைச் சேர்ந்த ஹர்மிஸ் ஷிக்கா, 33, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த தமது வருங்கால மனைவியை ஃபேஸ்புக்வழி சந்தித்தார்.
2014ஆம் ஆண்டு திருமணமானது. 2016ல் லயன் சிட்டி ஏர் கண்டிஷனர் சர்விசஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது அந்நிறுவனத்தில் ஏறக்குறைய 20 பேர் வேலை செய்கின்றனர்.
2025ல் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற திரு ஷிக்கா, இந்த நாடு நன்றாக ஆட்சி செய்யப்படுகிறது என்றும் கடின உழைப்புக்கு இங்கு வெகுமதி கிடைக்கும் என்றும் கருத்துரைத்தார்.
ஷு ஹைபின்
சீனாவைச் சேர்ந்த ஷு ஹைபின் 2007ல் சீன மொழியைக் கற்றுத்தர சீனாவின் ஜின்ஜியாங் நகரிலிருந்து சிங்கப்பூர் வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இப்போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 46 வயதாகும் ஷுவிற்கு 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டது. சிங்கப்பூரின் நிலைத்தன்மையும் பன்முகத்தன்மைக்கான வரவேற்பும் தமக்கு மனநிறைவுதரும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வகைசெய்ததாக திரு ஷு குறிப்பிட்டார்.
பிரித்திகா திவ்யாஷினி
2014ஆம் ஆண்டு ஏழு வயதில் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் வந்த பிரித்திகா திவ்யாஷினி, சிங்கப்பூரின் சிறந்த பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும் தரமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வியையும் விரும்புவதாகத் தெரிவித்தார்.
2025ஆம் அண்டு சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவர், தனது தந்தை சிங்கப்பூரில் வேலை செய்து வந்ததால் இங்கு குடிபுகுந்தார்.
ஆறுமுகம் முத்து கிருஷ்ணன்
கப்பல்துறை தொழில்நுட்பராகப் பணியாற்ற 1993ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்தார் இப்போது 56 வயதாகும் ஆறுமுகம் முத்து கிருஷ்ணன்.
வேலை அனுமதிச்சீட்டுடன் இங்கு வந்த அவர், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மணமுடித்தார். பின்னர் அவரது மனைவியும் சிங்கப்பூர் வந்தார்.
தற்போது செயல்பாட்டு நிர்வாகியாக இருக்கும் திரு கிருஷ்ணன், 2024ஆம் ஆண்டு புதுக்குடிமகனானார். அவருடைய மனைவிக்கும் அதே ஆண்டு குடியுரிமை கிடைத்தது.
இப்போது 23 வயது மகனும் 19 வயது மகளும் உள்ள திரு கிருஷ்ணன், உயரிய கல்வி வழங்கும் சிங்கப்பூர் அடுத்த தலைமுறையினரை வளர்ப்பதற்கான மிகச் சிறந்த இடம் என்று கூறுகிறார்.

