சிங்கப்பூரில் நாட்பட்ட சிறுநீரக நோய் அதிகரிப்பு

சிங்கப்பூரில் நாட்பட்ட சிறுநீரக நோய் அதிகரிப்பு

2 mins read
49c5dc10-0af7-4070-8f50-4717c12ff593
மூப்படையும் மக்கள்தொகை காரணமாக நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப்படம்: தி நியூ பேப்பர்

சிங்கப்பூரில் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிங்கப்பூர் சிறுநீரகப் பதிவேட்டு அறிக்கைப்படி, 2020ஆம் ஆண்டில் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2,249ஆக இருந்தது. 2011ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,587ஆக இருந்தது.

2035ஆம் ஆண்டுக்குள் 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் கால்வாசியினருக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படும் சாத்தியம் இருக்கும் என்று 2018ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அந்நோய் இருப்பதையே அறிந்திருக்க மாட்டார்கள் என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டிருந்தது.

நோயாளிகளின் உடல், மனரீதியான மதிப்பீடுகளின் அடிப்படையில் பலசேவைப் பராமரிப்பை வழங்க, மூத்தோருக்காக சாங்கி பொது மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவத் துறை நாட்பட்ட சிறுநீரக நோய் மருந்தகம் ஒன்றை இவ்வாண்டு ஏப்ரலில் நிறுவியது.

புதிய மருந்தகம், நோயாளிகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிர்வகிப்பு, வாழ்க்கைமுறை மாற்றங்கள், கொடுக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி கற்றுக்கொடுப்பதில் முக்கியக் கவனம் செலுத்துவதாக அத்துறையைச் சேர்ந்த மருத்துவர் யோன் வென்சியாங் கூறினார்.

அதில் ஒருங்கிணைந்த பராமரிப்பும் வழங்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 200 நோயாளிகள் சாங்கி பொது மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குச் செல்வதாக டாக்டர் யோன் தெரிவித்தார்.

உலகளவில் நீரிழிவால் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்புப் பட்டியலில், சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்பதாக 2022ஆம் ஆண்டின் அமெரிக்க சிறுநீரகப் புள்ளிவிவர வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மூப்படையும் மக்கள்தொகை காரணமாக நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்