நீதிமன்றத் தீர்ப்பு தேர்தலில் பாட்டாளிக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தாது என்று பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்ததாகக் குறிப்பிடும் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரித்தம் சிங், அத்தீர்ப்பின் தாக்கம் பொதுத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பது குறித்து விளக்கமளித்தார்.
அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ஐவர் அணியுடன் செய்தியாளர்களிடம் திரு பிரித்தம் சிங் பேசினார்.
வாக்காளர்கள் எப்படி முடிவெடுப்பார்கள் என்று தம்மால் கூற முடியாது என்றார் அவர்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு அத்தீர்ப்பு குறித்த முழுமையான தீர்ப்பு விவரம் கிடைத்ததாகச் சொன்ன பிரித்தம், அதன் தொடர்பில் தாம் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் சொன்னார்.
அந்த வழக்கில் அவருக்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டது.
“சிங்கப்பூரில் மிகவும் அறிவார்ந்த, மதிப்புக்குரிய, செல்வாக்கு மிக்க ஒருவர், தன் வாழ்நாளில் முக்கியமான தேர்தலைச் சந்தித்தபோது, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “அந்தக் குற்றச்சாட்டு ஒருவர் மீது தவறாகச் சுமத்தப்பட்டுள்ளது என்றார். அவர் வேறு யாருமல்ல, நமது அதிபர் தர்மன் சண்முகரத்னம்,” என்றார் திரு பிரித்தம்.
தம்முடைய வழக்கு தற்போது மேல்முறையீடு செய்யும் நிலையில் இருப்பதால் அதுகுறித்து தான் கருத்து எதுவும் கூற முடியாது என்றார் அவர்.

