ஜூலை மாதம் முதல் சிங்கப்பூரில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடுமையான வெப்பத்தை உருவாக்கும் எல் நினோ வானிலை நிகழ்வு மீண்டும் தொடங்கும் என குடியரசின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்காசியாவும் கடந்த ஆண்டுகளை விடத் தீவிரமான எல் நினோவால் பாதிக்கப்படலாம் என்று சில அனைத்துலக வானிலை அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
எல் நினோ என்பது ஒரு வட்டாரத்தில் குறைந்த மழைப்பொழிவு, நீண்ட வறண்ட காலங்கள், அதிக வெப்பநிலையை ஏற்படுத்தும் ஒரு காலநிலை நிகழ்வைக் குறிக்கிறது.
இது, எல் நினோ-தெற்கு அலைவு எனப்படும் ஓர் இயற்கைச் சுழற்சியின் விளைவாக ஏற்படுகிறது. அச்சமயச் சுழற்சியின்போது, காற்றின் மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியவை, புவியின் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய பசிபிக் பெருங்கடலின் வானிலை அமைப்புகளை வடிவமைக்கின்றன.
2025ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து சிங்கப்பூர் லா நினா நிலைமைகளை அனுபவித்து வருகிறது. எல் நினோவின் அலைவு நிலைக்கு எதிரான கட்டமான லா நினா, சிங்கப்பூரில் வழக்கத்தை விடக் குளிர்ச்சியான வானிலையையும் அதிக மழைப்பொழிவையும் கொண்டுவருகிறது.
இருப்பினும், இந்த நிகழ்வு சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்துக்கும் எவ்வளவு தீவிரமாக இருக்கக்கூடும் என்பதைக் கணிப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை என உள்ளூர் பருவநிலை அறிவியலாளர்களும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தன.
உலகப் பருவநிலை ஆராய்ச்சித் திட்டத்தின் ஆசிய-ஆஸ்திரேலியப் பருவமழைகளுக்கான செயற்குழுவின் உறுப்பினராகவும் உள்ள வானிலை ஆய்வாளர் கோ தியே யோங், வட அரைக்கோளத்தில் வசந்தகாலம் வரும் இந்தச் சமயத்தில் எல் நினோ முன்னறிவிப்புகள் துல்லியமற்றவையாக இருப்பது அனைவரும் அறிந்ததே என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை மாதம் முதல் எல் நினோ நிலைமைகள் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளது.
“எல் நினோ உருவானால், அது ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூரின் மழைப்பொழிவை அதிகமாகப் பாதிக்கும்,” என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் கீழ் இயங்கும் அந்த அமைப்பு கூறியது.

