ஏறத்தாழ பதினொரு முக்கியத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை சிங்கப்பூரும் மலேசியாவும் அமைத்துள்ளன.
இந்தச் சிறப்புப் பொருளியல் மண்டலம், பல்வேறு திட்டங்களை வகுத்து, திறன் அடிப்படையிலான பணி வாய்ப்புகளை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளது.
இது குறிப்பிட்ட சில துறைகளில் சிங்கப்பூரைச் சார்ந்தோர்க்குப் பலனளிக்கும் என நம்புவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் குறிப்பாக சிங்கப்பூரில் வர்த்தகமும், மலேசியாவில் உற்பத்தியும் கொண்டுள்ளோர்க்கு உதவியாக இருக்கும் என்று கணிப்பதாகக் கூறினார் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) மூத்த ஆலோசகரும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் துணைத் தலைவருமான ராஜ்குமார் சந்திரா.
“உற்பத்தி மையங்களை அமைக்க சிங்கப்பூரைவிட மலேசியாவில் அதிக இடம் உள்ளது. ஒப்பீட்டளவில், செலவுகளும் குறைவாக இருக்கும். இது சிங்கப்பூர் வர்த்தகர்கள் அங்கு மையம் அமைக்க ஏதுவாக அமைவதுடன், அங்குள்ள வர்த்தகங்களுடன் இணைந்து செயல்பட சிறந்த வாய்ப்பு அளிக்கும் எனக் கருதுகிறேன்,” என்றார் அவர்.
“இது இருதரப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மலேசியாவில் ஊழியர் பற்றாக்குறை இல்லை. எனவே, அதனை சிங்கப்பூர்த் தொழில் நிறுவனங்கள் சாதகமாக்கிக் கொள்ளலாம். இது மலேசியாவில் உள்ளோர்க்குப் பணி வாய்ப்புகளை அதிகரிக்கும். சிங்கப்பூரின் துறைமுகப் போக்குவரத்துகளை மலேசியத் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றும் திரு ராஜ்குமார் கருத்துரைத்தார்.
விரைவில் சிங்கப்பூரில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் பட்டதாரிகளாக இருப்பார்கள் என்பதால் உடல் உழைப்பு தேவைப்படும் தளவாடம், உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டால், மலேசிய ஊழியர்களால் அதனை ஈடுசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
இருதரப்பிலும் கிட்டும் ஆதரவுகளையும் மானியங்களையும் பயன்படுத்த இது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் திரு ராஜ்குமார்.
தொடர்புடைய செய்திகள்
ஜோதி ஸ்டோர்ஸ் புஷ்பக்கடை உரிமையாளருமான அவர், “எங்களுக்கும் மலேசியாவில் அலுவலகங்கள் உள்ளன. அருகிலுள்ளதால், அவற்றைக் கண்காணிப்பதும், நிர்வகிப்பதும் எளிது. இது கூடுதல் சாதகம்,” என்றார்.
“தொடர்ந்து, சிங்கப்பூரின் ஈடுபாடு இருந்தால் இருநாட்டுச் சாதகங்களையும் கருதி பன்னாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய முன்வரும். இது நீண்டகாலப் பொருளியல் வளர்ச்சிக்கு வித்திடும்,” என்றும் அவர் சொன்னார்.
மலேசியாவில் உற்பத்தியும் சிங்கப்பூரில் வர்த்தகமும் செய்துவரும் பாவாஸ் டெலிக்கசி உரிமையாளர் ஃபாரூக், இது பல்வேறு நிலைகளிலும் தாக்கம் செலுத்தும் எனக் கருதுகிறார்.
“சுருக்கமாகச் சொன்னால், ஒரு பொருளின் விலை, அதன் உற்பத்திக்கு ஆகும் செலவைக் கணக்கிட்டு வகுக்கப்படுகிறது. எங்களை போன்ற வர்த்தகர்கள் தொடங்கி, புதிய, சிறு வர்த்தகர்கள் வரை, எளிதாக உற்பத்தியும் இறக்குமதியும் செய்ய முடிந்தால், விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்”, என்று அவர் சொன்னார்.
“உணவு சார்ந்த உற்பத்திப் பொருள்கள் ஏற்கனவே மலேசியாவிலிருந்து இறக்குமதியாகின்றன. அது சார்ந்த வரிக் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கும் பட்சத்தில், சிறு தொழில்களுக்கு உதவியாக இருக்கும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம்,” என்றார் திரு ஃபாரூக்.
“இந்தச் சிறப்புப் பொருளியல் மண்டலம் சிறு, சில்லறை வர்த்தகர்களுக்கு பெரிதும் உதவும் எனக் கருதவில்லை,” என்று சொன்ன ‘லிஷா’ தலைவர் ரகுநாத் சிவா, “அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு, நிர்வாகம், நிதி உள்ளிட்ட பெரிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும். இத்துறைகளில் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோரையும் ஊக்குவிக்கும்,” என்றார்.
இரு நாடுகள் இணைந்து செயல்படுவது கவனிக்கத்தக்கது என்று சொன்ன சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் சின்னு பழனிவேலு, “இத்திட்டம் சிங்கப்பூர் தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்தும் இயந்திரம்,” என்றார்.
“சிங்கப்பூர் சிறிய நாடு என்பதால் காலப்போக்கில் வளர்ச்சியின் வேகம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தக் கூட்டுமுயற்சி அதற்கான சாத்தியங்களைக் குறைக்கும்,” என்றார் திரு பழனிவேலு.
“பணிவாய்ப்புகள் சிங்கப்பூரர்களைவிட மலேசியர்களுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகச் சிலர் கருதலாம். ஆனால், வாய்ப்புகள் சமமாக இருக்கும் என்பது என் கருத்து,” என்றார் அவர்.
“எடுத்துக்காட்டாக, ஜப்பானியத் தொழில் உற்பத்தி மையமோ, அலுவலகமோ மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டால், அங்குள்ள ஊழியர்களைப் பணியமர்த்தினாலும், நிர்வாகப் பொறுப்பில் ஜப்பானியர்கள் இருப்பார்கள். இந்தச் செயல்பாடு சிங்கப்பூருக்கும் பொருந்தும். சிறப்புத் திறன் சார்ந்த பணி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை”, என்று விளக்கினார் திரு சின்னு.
“இதில் நான் பார்க்கும் இன்னொரு தாக்கம், முதலீடுகளும், சந்தை வாய்ப்புகளும் அதிகரிக்க, காலப்போக்கில் ஜோகூர் பாருவில் விலைவாசி அதிகரிக்கலாம். சிங்கப்பூரிலும் ஜோகூரிலும் விலைவாசி சமநிலையை எட்டினால், அதுவும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குச் சாதகந்தான். சிங்கப்பூர், மலேசிய நாடுகளை ஒன்றாகக் கருதி முதலீட்டு வாய்ப்புகள் குவிந்தால் வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

