அதிகாரி போல நடித்து பண மோசடி வழக்கு: மலேசியர் மீது நாளை குற்றச்சாட்டு

2 mins read
68988d7a-0f15-4e96-ad65-45677dc75c21
ஜூன் மாதத்தில்மட்டும் அரசாங்க அதிகாரிபோல நடித்த மோசடி சம்பவங்களில் $6.7 மில்லியன் ஏமாற்றப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரிபோல நடித்து பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் அதற்கு உடந்தையாக இருந்த 31 வயது மலேசியர்மீது நாளை குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறை மலேசியரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தது.

பாதிக்கப்பட்டவரிடம் பேசிய மோசடிக்காரர்கள், பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி அவருடைய பணத்தை மற்றொரு நபரின் வங்கிக் கணக்குக்கு மாற்றும்படி கூறினர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர் 50,000 வெள்ளியை 31 வயது மலேசியரின் வங்கிக் கணக்குக்கு மாற்றினார்.

அந்த மலேசியர் அடையாளம் தெரியாத மோசடிக்காரர்களுக்காக பாதிக்கப்பட்டவரிடமிருந்துப் பணத்தைப் பெற்று பின்னர் மோசடிக்காரர்களிடம் ஒப்படைத்ததாகத் தெரிகிறது. இதற்காக ஒரு தொகையை மலேசியர் பெற்றுக் கொண்டதாக நம்பப்படுகிறது.

மோசடித் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், நேற்று ( ஆகஸ்ட் 24) அந்த மலேசியர் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது கைது செய்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் குறைந்தது நான்கு மோசடி சம்பவங்களில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள், பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணத்தைப் பெற்று தங்களிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் கூறியிருந்தனர். மலேசியரும் அதேபோல அடையாளம் தெரியாத நபர்களிடம் பணத்தை ஒப்படைத்துள்ளார்.

குற்றச்செயல்களால் பலனடையும் மற்றவருக்கு உதவியதாக அவர் மீது குற்றம்சாட்டப்படவிருக்கிறது. இதற்கு பத்து ஆண்டுகள் வரை சிறை, 500,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அரசாங்க அதிகாரிகள் ஒரு போதும் பணத்தை மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றச் சொல்ல மாட்டார்கள் என்று காவல்துறை நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்