இணையத்தில் அல்லது சமூக ஊடகங்களில் வெளிவரும் நிதி முதலீடு சார்ந்த விளம்பரங்களில் உள்ள பிரபலங்களின் புகைப்படங்களைப் பார்த்து அவற்றை உடனே நம்பிவிடாதீர்கள்.
நிதி நிபுணர்கள், முதலீட்டு ஆசான்கள் போன்றோரின் முகத்திரைக்குப் பின்னால் மோசடிக் கும்பல்கள் ஒளிந்திருக்கின்றன. அவ்வாறான வேடமிட்டு, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்று கூறி மோசடிகள் செய்யப்படுவதாக காவல்துறை சனிக்கிழமை (அக்டோபர் 18) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடியான அந்த விளம்பரங்களை மக்கள் சொடுக்கும்போது, அவர்கள் வேறு இணையப் பக்கங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். அதன்பிறகு வாட்ஸ்அப் வழி அவர்கள் தொடர்புகொள்ளப்பட்டு நிதி ஆலோசகர்கள் என்ற பெயரில் மோசடிக்காரர்களுடன் உரையாடல்கள் நடத்தப்படுகின்றன.
பாதிக்கப்பட்டோர் முதலீடுகளுக்கான செயலிகளைப் பதிவிறக்கம் செய்யத் தூண்டப்படுகின்றனர். அந்தச் செயலிகள் மோசடிக்காரர்களால் நிர்வகிக்கப்படுபவை. அவற்றைக் கொண்டு மோசடிக்காரர்கள் பலவித அறிவுரைகளை வழங்கி அதிக அளவில் நிதி முதலீட்டைச் செய்யக் கேட்டுக்கொள்வர்.
மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாதபோதும், முதலீடு செய்த பணத்தை மீட்டெடுக்கத் தவறும்போதும் அவர்கள் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டோர் உணர்வர்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிடும் முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வுப் பட்டியல், நிதிக் கழகங்களின் பிரதிநிதிப் பதிவேடு, நிதி நிலையங்களின் பட்டியல் போன்ற அதிகாரபூர்வ ஆவணங்களை சரிபார்த்து முதலீட்டு வாய்ப்புகளும் அவற்றை வழங்கும் நபர்களும் உண்மையானவர்களா என்பதை உறுதிசெய்துகொள்ளும்படி காவல்துறை கேட்டுக்கொண்டது.
மோசடிகள் குறித்து மேல் விவரங்கள் அறிய 24 மணிநேரமும் இயங்கும் 1799 என்ற ‘ஸ்கேம்ஷீல்ட்’ உதவி எண்களைத் தொடர்புகொள்ளும்படி காவல்துறை நினைவூட்டியது.
