பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்களை ஏற்று, அச்சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ளhg தயாராக இருக்க வேண்டிய நிலை கடந்த ஓராண்டில் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூரின் பருவநிலை நடவடிக்கைத் தூதர் ரவி மேனன் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 21) தெரிவித்தார்.
சிங்கப்பூரின் பருவநிலைத் தூதராக 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரு மேனன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பருவநிலை நடவடிக்கைத் தூதர் என்ற முறையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று முதல்முறையாக அதிகாரபூர்வமாக ஊடகங்களுப் பேட்டி அளித்தார்.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பருவநிலை மாற்றத்தின் வேகம் குறித்து விஞ்ஞானிகள் தற்போது அதிகம் கவலைப்படுவதாகத் திரு மேனன் கூறினார்.
“உலகளாவிய வெப்பநிலையை, தொழில்துறை பரவலாவதற்கு முன்பு இருந்த வெப்பநிலையைவிட கூடுதலாக 1.5 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்கும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு. எனவே, பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்,” என்று திரு மேனன் தெரிவித்தார்.
எனவே, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்துகொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சிங்கப்பூர் தனிநாடாகவும் அண்டை நாடுகளுடன் சேர்ந்தும் அதிகரிக்க வேண்டும் என்று திரு மேனன் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் பருவநிலை நடவடிக்கைத் தூதர் என்கிற முறையில், பருவநிலை மாற்றத்தை ஏற்று அதன்படி நடந்துகொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்.


