தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படை ‘எஸ்ஜி’ தற்காப்புத் தொண்டூழியக் கட்டமைப்பை இவ்வாண்டு (2026) நிறுவவிருக்கிறது.
“நமது தற்காப்புக்கு வலுவான ஆயுதப்படை மட்டும் போதுமானது அன்று. சமூகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது,” என்று நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
முதலாவதாக, தற்காப்பு அமைச்சு, ‘சாஃப்ரா’, இதர நிறுவனங்களில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் தொண்டூழியர்களுக்கான பொறுப்புகளைக் கட்டமைப்பு விரிவுபடுத்தும்.
இரண்டாவதாக, சிங்கப்பூர் ஆயுதப்படையின் தொண்டூழியர் அணிப் படையின்வழி ராணுவத் தொண்டூழியர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
2025ஆம் ஆண்டில் பத்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய தொண்டூழியர் அணிப் படையில் 1,500க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் பயிற்சி பெற்று, சேவையாற்றியிருப்பதாகத் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது குறிப்பிட்டார்.
“எதிர்காலத்தில் பல்வேறு வேலைகளில் அதிகமானோர் பணியாற்றும் அளவுக்குப் படையை மேம்படுத்துவோம். சிங்கப்பூர்ப் பெண்கள், புதிய குடிமக்கள், சேவை செய்ய விரும்பும் நிரந்தரவாசிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார் அவர்.
தேசியச் சேவையாளர்களுக்குக் கூடுதல் ஆதரவு
முழுநேர, தயார்நிலையில் உள்ள தேசியச் சேவையாளர் பெற்ற சான்றிதழ்கள், அவர்களின் வாழ்க்கைத்தொழில், திறன்கள் அடங்கிய ஆவணங்களில் இடம்பெறும் என்று திரு சான் கூறினார்.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ அமைப்புடன் இணையும் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை, தெரிவுசெய்யப்பட்ட ஆயுதப்படைப் பயிற்சி நிறுவனங்களுடன் சோதனை முயற்சியை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“தேசியச் சேவையில் சேவையாளர்கள் பெறும் திறன்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது,” என்றார் திரு சான்.
இதன் தொடர்பில் இவ்வாண்டு முதல், மாணவர்கள் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ராணுவப் பொறியாளர்களுக்கான சிங்கப்பூர் ஆயுதப்படை-பலதுறைத் தொழிற்கல்லூரிக் கல்வி உபகாரச்சம்பளத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
2023ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் சிலர் ஓராண்டு முன்னதாகவே ராணுவச் சேவையில் சேர அனுமதிக்கும் வேலை-கற்றல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைச் சுட்டினார் திரு ஸாக்கி.
சிங்கப்பூர்க் கடல்துறைப் பயிற்சிக்கழகத்துடன் கடந்த ஆண்டு வேலை-கற்றல் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் கடற்படைப் போர் முறை நிபுணர்களுக்கு அதில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது மொத்தம் 10 வேலை-கற்றல் திட்டங்கள் உள்ளன. அவற்றில் இதுவரை சுமார் 850 முழுநேர தேசியச் சேவையாளர்கள் பதிவுசெய்துள்ளனர்.
தேசியச் சேவையில் சேர்ந்த பிறகும் வேலை-கற்றல் திட்டங்களை அவர்கள் தொடரலாம் என்று திரு ஸாக்கி கூறினார்.

