வட்டார விவகாரங்களில் சீனாவையும் ஜப்பானையும் ஈடுபடுத்துவது முக்கியம்: பிரதமர் வோங்

வட்டார விவகாரங்களில் சீனாவையும் ஜப்பானையும் ஈடுபடுத்துவது முக்கியம்: பிரதமர் வோங்

2 mins read
5984cf3f-82ea-498e-9a07-feb4c15c4e4a
ஹாங்காங்கில் சனிக்கிழமை (மார்ச் 28) செய்தியாளர்களிடம் பேசும் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இருதரப்பு உறவுக்காக மட்டுமல்லாமல், வட்டார விவகாரங்களை வடிவமைப்பதிலும் சீனாவையும் ஜப்பானையும் ஈடுபடுத்துவது சிங்கப்பூருக்கு முக்கியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

அவ்விரு வடகிழக்காசிய நாடுகளும் ஆசியானுக்கு முக்கியப் பங்காளிகள் என்றார் அவர்.

சீனா ஆசியானின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி. ஜப்பான் ஆசியானின் முன்னணி முதலீட்டாளர். வர்த்தகத்தைத் தாண்டி, ஆசியானை மையமாகக் கொண்ட வட்டாரக் கட்டமைப்பில் இரு நாடுகளும் முக்கியப் பங்காளிகளாகத் திகழ்கின்றன. சிங்கப்பூர் 2027ஆம் ஆண்டில் ஆசியானுக்குத் தலைமைதாங்கும்.

“சிங்கப்பூருக்குச் சீனாவும் ஜப்பானும் முக்கியப் பங்காளிகள்,” என்றார் பிரதமர் வோங்.

“இது சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, ஆசியானுக்கும் பொருந்தும். அதனால்தான், இரு நாடுகளுடனும் தொடர்பில் இருப்பதும், அவற்றுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், இருதரப்பு உறவில் மட்டுமல்லாமல் வட்டார விவகாரங்களை வடிவமைப்பதிலும் நாம் அவற்றைத் தீவிரமாக ஈடுபடுத்துவது முக்கியம்,” என்று திரு வோங் கூறினார்.

“சீனாவுக்கும் ஜப்பானுக்கும் சிங்கப்பூர் தொடர்ந்து வழங்கிவரும் செய்தி இதுதான். இரு நாடுகளுக்கும் நாங்கள் மேற்கொண்ட பயணங்கள் சிறப்பாக அமைந்தன. சீனாவுடனும் ஜப்பானுடனும் ஆக்கபூர்வமான தொடர்புகளையும் மேலும் கூடுதலான ஒத்துழைப்பையும் நாங்கள் தொடர்ந்து வரவேற்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 25ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை ஹைனானுக்கும் ஹாங்காங்கிற்குமான தமது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் வோங், சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசினார்.

ஹைனான் மாநிலத்தில் நடைபெற்ற சீனாவின் வருடாந்தர ஆசியாவுக்கான போஆ மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு அவர் ஹாங்காங் சென்றிருந்தார்.

அந்தப் பயணம், மார்ச் 17ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை அவர் ஜப்பானுக்கு மேற்கொண்ட தமது முதல் அதிகாரபூர்வப் பயணத்தைத் தொடர்ந்து அமைந்தது.

திரு வோங், 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமராக சீனாவுக்குத் தமது முதல் அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொண்ட பிறகு, ஒன்பதே மாதங்களில் இது அவரது இரண்டாவது சீனப் பயணமாக அமைந்தது.

போஆ மாநாட்டின் தொடக்க அமர்வில், அவர் முக்கிய உரையாற்றினார்.

உலகம் ஒத்துழைப்புக்கான புதிய பாதைகளை உருவாக்கிவரும் நிலையில், மேலும் அதிக மீள்திறன் கொண்ட உலகளாவிய ஒழுங்கை வடிவமைப்பதில் சீனா மிக முக்கியப் பங்கு வகிப்பதாக திரு வோங் குறிப்பிட்டார்.

அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர் தோக்கியோவில் இருந்தார். அப்போது, சிங்கப்பூரும் ஜப்பானும் தங்கள் உறவை உத்திபூர்வ பங்காளித்துவ நிலைக்கு உயர்த்தின. செயற்கை நுண்ணறிவு, பசுமை உருமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்இருதரப்பு உறவுசீனாஜப்பான்