நமது செயல்பாடுகளும் சேவைகளும் மின்னிலக்க முறையில் அதிகம் இடம்பெறுவதால் இணையத் தாக்குதல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பை மேம்படுத்துவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி சனிக்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பில் நடைபெற்ற நினைவு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக இடம்பெற்ற ‘எக்சர்சைஸ் எஸ்ஜிரெடி’ எனும் முழுமைத் தற்காப்பு திட்ட நிகழ்ச்சியில், வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் சிங்கப்பூரின் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை வலியுறுத்தினார்.
“இணையம்வழி ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். இணையத்தில் இடம்பெறும் நமது தரவுகளையும் கருவிகளையும் பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்,” என்று திரு கான் கேட்டுக்கொண்டார்.
அதேபோல, நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர் தன்னைத் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் மூத்த அமைச்சர் திரு டியோ சீ ஹியன் கூறினார்.
மேலும், இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு, நெக்சஸ் அமைப்பு ஆகியவை புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றை பரிமாறிக்கொண்டன. தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் முன்னிலையில் அது இடம்பெற்றது.
தற்காப்பு அமைச்சு, எரிசக்திச் சந்தை ஆணையம் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் இவ்வாண்டின் முழுமைத் தற்காப்புத் திட்டம் மின்தடையின்போது சிங்கப்பூரர்களின் தயார்நிலையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
முழுமைத் தற்காப்புத் தின நினைவு நிகழ்ச்சியில் மின்னஞ்சல்வழி ஆபத்துகளைத் தடுத்தல், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நடத்திய மின்தடைப் பயிற்சி, எஸ்பி குழுமத்தின் நடுமாடும் மின்னியற்றி சேவை போன்ற அங்கங்களும் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
முழுமைத் தற்காப்பு தினத்தை தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் 28 வரை சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் ‘எக்சர்சைஸ் எஸ்ஜிரெடி’ திட்டத்தின் பல பயிற்சிகள் நடைபெறும்.
‘இடையூறுகளுக்கு நீ தயாரா’ எனும் கருப்பொருளைக் கொண்ட இந்தத் திட்டத்தின்வழி பள்ளிகள், சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட அரசாங்க நிறுவனங்கள் பல்வேறு தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.
பயிற்சிகள் இடம்பெறும் நேரம் மற்றும் இடங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பொதுமக்கள் https://go.gov.sg/sgreadygowhere என்ற இணையத்தளத்தை நாடலாம்.

