வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கில் உள்ள பொது நடைபாதையில் ‘லஞ்ச்சியான் மீட்’ எனப்படும் பன்றி இறைச்சி உணவைப் போட்டவருக்கு புதன்கிழமை (பிப்ரவரி 11) 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமய நல்லிணக்கப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ஒருவரின் சமய உணர்வுகளைக் காயப்படுத்திய குற்றச்சாட்டையும் அரசாங்க அதிகாரிக்கு எதிராகத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டையும் விக்னேஸ்வரன் மோகனவேல் எனும் அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் மீண்டுமொரு சர்ச்சை. இம்முறை அண்டைவீட்டுக்காரரின் பிள்ளைகள் எழுப்பிய சத்தத்தால் சினமுற்றார் 36 வயது விக்னேஸ்வரன்.
சம்பவம் உட்லண்ட்சில் நடந்தது. விக்னேஸ்வரனின் அண்டை வீட்டில் வசிக்கும் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். நான்கு வயதும் ஏழு வயதுமுடைய இரண்டு பிள்ளைகள் பொது நடைபாதையில் விளையாடுவது வழக்கம்.
சத்தப் பிரச்சினை குறித்து அவர் இதற்கு முன்னர் சமூகக் காவல் பிரிவிடம் தெரிவித்திருந்தார்.
முதலில் சமூகக் காவல் பிரிவு அதிகாரிகளின் தலையீட்டால் நிலைமை மேம்பட்டதாக விக்னேஸ்வரன் கருதினார். பின்னர் சென்ற ஆண்டு (2025) அக்டோபரில் பொது நடைபாதையில் பிள்ளைகள் மீண்டும் விளையாடியபோது அவர் கோபமடைந்தார்.
தமது வீட்டில் நடைபெறவிருந்த ஒன்றுகூடல் நிகழ்வை ரத்துச் செய்ய நேரிட்டதாக விக்னேஸ்வரன் சொன்னார்.
சமூகக் காவல் பிரிவை அக்டோபர் 20ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அழைத்தார். அதற்கு 15 நிமிடத்திற்குப் பின்னர், பிள்ளைகள் அவர்கள் வீட்டுக்குத் திரும்பினர்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவ இடத்திற்குச் சென்ற சமூகக் காவல் பிரிவினர், விக்னேஸ்வரனிடமும் பிள்ளைகளின் தாயாரிடமும் பேசினர். இருப்பினும், சத்தப் பிரச்சினைக்கான தீர்வை விக்னேஸ்வரனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
பக்கத்து வீட்டுக்காரர்கள் மலாய்-முஸ்லிம் சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்குத் தெரியும்.
காவல்துறையை அழைத்துப் பன்றி இறைச்சியை வீசப்போவதாகச் சொன்னார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. பொது நடைபாதையில் பன்றி இறைச்சி உணவைப் போட்டார். அதை அகற்றுமாறு காவல்துறையினர் அவரிடம் கூறினர். ஆனால் விக்னேஸ்வரன் மறுத்துவிட்டார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு, மனநலக் கழகத்தில் தடுத்துவைக்கப்பட்டார்.

