சிங்கப்பூரில் மேம்படும் காற்றுத்தரம்

சிங்கப்பூரில் மேம்படும் காற்றுத்தரம்

நாடு முழுவதும் ஒரு மணி நேரத்துக்கான காற்றுத்தரக் குறியீடு ‘இயல்பு நிலையில்’ பதிவானது
1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Oct 2026 - 2:29 pm

1 mins read

சிங்கப்பூரில் வியாழக்கிழமை (அக்டோபர் 22) காற்றுத்தரம் மேம்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் ஒரு மணிநேரத்துக்கான பிஎம்2.5 அளவீடுகள் ‘இயல்பு’ நிலைக்குத் திரும்பின. பெரும்பாலான பகுதிகளில் 24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீடு, ‘நல்லது’ முதல் ‘மிதமானது’ எனும் வரம்பில் இருந்தது.

வியாழக்கிழமை நண்பகலில், பிஎம்2.5 அளவீடு 19 முதல் 45 வரை பதிவானது. மேற்கு வட்டாரத்தில் அது மிக அதிகமாகப் பதிவானது. இது அக்டோபர் 14ஆம் தேதி, உச்சமாக 288ஆகப் பதிவானது நினைவுகூரத்தக்கது.

வியாழக்கிழமை அதிகாலை 1 மணி முதல் தீவு முழுவதும் பிஎம்2.5 அளவீடு இயல்பு நிலையில் நீடிக்கிறது.

முன்னதாக, புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில், வியாழனன்று காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் செல்லலாம் என தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தோனீசியாவின் கலிமந்தான், சுமத்ரா ஆகிய பகுதிகளில் புகைமூட்டம் தென்பட்டதாகவும் அமைப்பு கூறியது.

தென்கிழக்குக் காற்றினால் கலிமந்தான் புகைமூட்டம் சிங்கப்பூரை நோக்கி நகரக்கூடும். சனிக்கிழமை, காற்று தென்மேற்குத் திசை நோக்கி வீசக்கூடும் என்பதால், சுமத்ராவிலிருந்தும் புகைமூட்டம் வரக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது 18வது நாளாக, புகைமூட்டத்தால் காற்றுத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்