புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் இரண்டு பிள்ளைகளைக் காருக்கு மேல் அமரவைத்து வாகனமோட்டிய சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பார்ஷே என்னும் சொகுசுக் காரின் பின்பகுதியின் மேல் பிள்ளைகள் அமர்ந்து இருப்பதையும் அவர்கள் அமர்ந்திருந்தபோது வாகனம் சாலையில் செல்வதையும் சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட காணொளிகளில் பார்க்க முடிந்தது.
காணொளி அக்டோபர் 20ஆம் தேதி எஸ்ஜி ரோட் விஜிலான்டே என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. கார் மஞ்சள் நிறத்தில் இருந்தது. சம்பவம் நடந்த பகுதி டெய்ரி பார்ம் வால்க் என்று நம்பப்படுகிறது.
காருக்கு மேல் அமர்ந்திருந்த இருவரும் சிறுவர்கள். அவர்கள் காரில் உள்ள ஒரு பகுதியைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தனர்.
இதற்கிடையே இக்காணொளி அக்டோபர் 20ஆம் தேதி டிக்டாக் தளத்தில் @premroymotoring என்னும் கணக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 22ஆம் தேதி அக்கணக்கிலிருந்து அந்தக் காணொளி நீக்கப்பட்டது.
இந்நிலையில் ஆபத்தான முறையில் வாகனமோட்டியது குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

