சுகாதார ஊழியர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் இருமடங்காக அதிகரிப்பு

சுகாதார ஊழியர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் இருமடங்காக அதிகரிப்பு

படம்: தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை

30 Sep 2026 - 7:57 pm

2 mins read

பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்படைந்துள்ளன. இதில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட கடுமையான சம்பவங்கள் 13 விழுக்காடு.

பொதுச் சுகாதார அமைப்புகளில் 2023ஆம் ஆண்டில் 2,200 துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவான நிலையில், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,200ஆக உயர்ந்தது. அதேபோல, 2023ஆம் ஆண்டில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்ட 350 சம்பவங்களுடன் (16%) ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் 550 வழக்குகள் (ஏறத்தாழ 13%) காவல்துறையிடம் கொண்டுசெல்லப்பட்டன.

சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான முத்தரப்புப் பணிக்குழுவின் இறுதியறிக்கையை புதன்கிழமையன்று (செப்டம்பர் 30) வெளியிட்டுப் பேசிய சுகாதார துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் இத்தகவல்களைத் தெரிவித்தார்.

ஏற்றுக்கொள்ள முடியாத இத்தகைய நடத்தைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதையும் துணிச்சலாக முன்வந்து குரல் கொடுக்க ஊழியர்கள் காட்டும் நம்பிக்கையையுமே இது காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கூ டெக் புவாட் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய ஆண்டின் பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

“பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உள்ளது. குறிப்பாக நோயாளிகளோ அல்லது அவர்களைப் பராமரிப்பவர்களோ பதற்றமாக அல்லது விரக்தியாக இருக்கும்போது, சில கடினமான உரையாடல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காகத் துன்புறுத்தல்களையும் வசவுகளையும் பணி வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று துணையமைச்சர் ரஹாயு வலியுறுத்தினார்.

துன்புறுத்தல் தடுப்புக்கான தேசிய அளவிலான முயற்சிகளை முன்னெடுக்க 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த முத்தரப்புப் பணிக்குழுவின் செயல்பாடு அதன் இறுதியறிக்கையோடு அதிகாரபூர்வமாக நிறைவடைகிறது.

ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளானாலோ, அவதிக்குள்ளானாலோ அல்லது அவர்களின் பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டாலோ அது துன்புறுத்தலாகவே கருதப்படும் என்று இக்குழு வரையறுத்துள்ளது.

மேலும், இத்தகைய சம்பவங்களின் கடுமையைப் பொறுத்து அவற்றை வகைப்படுத்தி, அவற்றுக்கான உரிய நடவடிக்கைப் பரிந்துரைகளையும் அது முன்வைத்துள்ளது. மருத்துவ ரீதியாக வெளியேற்றப்படத் தகுதியான நிலையில் உள்ள கட்டுப்படாத நோயாளிகளை மருத்துவமனையைவிட்டு வெளியேறுமாறு கோரவும் இது வழிவகை செய்கிறது.

அதேவேளையில், ஊழியர்களைப் பாதுகாப்பதற்காகத் தலைமை நல்வாழ்வு அதிகாரிகளை நியமிப்பது போன்ற சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்