உலகில் ஆகப் பாதுகாப்பான வழிபாட்டுத் தலங்களைக் கொண்டுள்ள சிங்கப்பூர், இவ்வாண்டு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது.
அத்தகைய அச்சுறுத்தல்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டா என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் அவ்வப்போது வலியுறுத்தியபோதும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தின் அமைதியைக் கீழறுக்கும் சம்பவம் நேர்ந்தது.
அதுபோன்ற சம்பவங்கள் சமூகங்களிடையே அவநம்பிக்கையையும் பிளவையும் ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சர் சண்முகம் எச்சரித்தார்.
சிங்கப்பூர் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் அச்சுறுத்தல்களால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் இவ்வாண்டு மக்கள் கவனத்தை ஈர்த்த அச்சுறுத்தல் சம்பவங்களில் ஒன்று பல்வேறு பள்ளிவாசல்களுக்கு சந்தேகத்திற்குரிய பொட்டலங்கள் அனுப்பப்பட்ட சம்பவம்.
செப்டம்பர் 24 ஆம் தேதி சிராங்கூன் நார்த்தில் உள்ள அல் இஸ்திகாமா பள்ளிவாசலுக்குச் சந்தேகத்திற்குரிய பொருள் அனுப்பப்பட்டதை அடுத்து பள்ளிவாசலிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மூச்சுத் திணறல் காரணமாகவும் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
செப்டம்பர் 25ஆம் தேதி பொட்டலத்தில் இறைச்சி காணப்பட்டது. அது பன்றி இறைச்சி என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அது தனித்துவமான ஒரு சம்பவமன்று. அதேபோல பிற பள்ளிவாசல்களுக்கும் பொட்டலங்கள் அனுப்பப்பட்டதைத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
மற்றொரு சம்பவமும் செப்டம்பரில் நேர்ந்தது. யூத மாணவர்கள் சிலர் பயிலும் சில அனைத்துலகப் பள்ளிகளின் கழிவறைகளில் இஸ்ரேலுக்கு எதிரான அவதூறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
அக்டோபர் மாதத்தில் தலைக்குப்பியுடன் வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள யூத ஆலயத்திற்குச் சென்றுகொண்டிருந்த யூத ஆடவரைப் பார்த்து மோட்டார்சைக்கிளில் சென்ற மற்றொரு நபர் ‘பாலஸ்தீனை விடுதலை செய்’ என்று கத்தினார்.
வழிபாட்டுத் தலங்கள் யார் வேண்டுமானலும் வந்துசெல்லக்கூடிய சுதந்திர இடங்களாக இருக்கவேண்டுமே தவிர பாதுகாவல் இடமாக இருக்கக்கூடாது என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.
ஏப்ரல் 2ஆம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, முஸ்லிம்கள் 100 பேரைக் கொலை செய்ய 17 வயது இளையர் போட்ட திட்டத்தை முறியடித்ததாக வெளிப்படுத்தியது.
ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்திற்கு அடிக்கடி செல்வதால் மாரொஃப் பள்ளிவாசலை இளையர் குறிவைத்ததாகக் கூறப்பட்டது.
வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளிவரும் முஸ்லிம்களைத் தாக்க அந்த இளையர் நினைத்திருந்தார்.

