‘இன்கம் இன்ஷூரன்ஸ்’ காப்புறுதி நிறுவனத்தின் தலைவரான ரோனல்ட் ஓங், ஏழாண்டுகளுக்குப் பிறகு அப்பணியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புதிய தலைவரை நியமிக்கும் பணி இடம்பெற்று வருகிறது என்றும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூடுதல் விவரங்கள் பகிரப்படும் என்றும் இன்கம் நிறுவனம் திங்கட்கிழமை (ஜூன் 9) ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
அதே நேரத்தில், இன்கம்மின் தாய் நிறுவனமான என்டியுசி என்டர்பிரைசின் இயக்குநரவையில் திரு ஓங் நீடிக்கிறார் என்று அதன் தலைவர் லிம் பூன் ஹெங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் இன்கம் இயக்குநரவையில் இடம்பெற்றுள்ள திரு ஓங், 2019ஆம் ஆண்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவரது காலத்தில்தான், கூட்டுறவு நிறுவனமாக இருந்த என்டியுசி இன்கம், நிறுவனச் சட்டத்தின்கீழ் இன்கம் இன்ஷூரன்ஸ் எனப் பெருநிறுவனமாக மாற்றம் கண்டது.
கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் இன்கம் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்திய திரு ஓங், அதன் மின்னிலக்கச் செயல்திறன்களை மேம்படுத்தவும் உதவினார்.
இன்கம் நிறுவன இயக்குநரவையில் சேவையாற்றியது தனக்குக் கிடைத்த கௌரவம் என்று திரு ஓங் கூறினார்.

