‘இன்கம்’ காப்புறுதி (Income Insurance) நிறுவனம் கடுமையான, உரிய செயல்முறைகளை அனுதாப உணர்வினாலும் பரிவினாலும் சமன்செய்ய வேண்டும் என்று தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் புதன்கிழமை (அக்டோபர் 8) கூறியுள்ளார்.
வழங்கீட்டுக் கோரிக்கை தொடர்பான அண்மைய தீர்ப்பு குறித்து அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் 78 வயதாக இருந்தபோது போக்குவரத்து விபத்தில் சிக்கி மூளையில் பலத்த காயங்களுக்கு ஆளான திரு கோ வாவின் சில மருத்துவச் செலவுக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள இன்கம் மறுத்ததை அடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
திரு கோவின் குடும்பத்திற்கு $417,000க்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததுடன், காப்புறுதி நிறுவனத்தின் செயல்பாட்டையும் மாவட்ட நீதிமன்றம் கண்டித்தது.
அக்டோபர் 1 தேதியன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில், காப்புறுதி நிறுவனத்தின் செயல் ‘முற்றிலும் நியாயமற்ற நடத்தை’ என்று கூறியதோடு நீதிமன்றம் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருந்தது.
மெடிஷீல்டு லைஃப் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட சில மருத்துவச் செலவுகளுக்குப் பணம் வழங்க அதன் ‘இரக்கமற்ற, தரமற்ற’ ஆட்சேபத்திற்கு நம்பகமான காரணத்தைக் காப்பீட்டு நிறுவனம் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இன்கம் காப்புறுதி நிறுவனம் திரு கோவின் மருத்துவமனைச் செலவுகளுக்குப் பணம் செலுத்த உடன்பட்ட போதிலும், ஆம்புலன்ஸ் தொடர்பான செலவுகளுக்கான $1,992 தொகையைச் செலுத்த மறுத்துவிட்டது.
தீர்ப்பு தமக்கு ஆழ்ந்த கவலையை அளித்ததாகவும், கடந்த ஆண்டில் திரு கோவின் குடும்பத்தினர் அனுபவித்த துயரத்திற்காக அனுதாபம் தெரிவிப்பதாகவும் ஃபேஸ்புக் பதிவில் திரு இங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2019 ஜூன் மாதம், தோ குவான் ரோடு ஈஸ்டில் உள்ள தொழிற்பேட்டைக் கட்டடத்தின் கீழ்த்தள கார்நிறுத்துமிடத்தில் பாதுகாவலரான திரு கோவை வேன் ஒன்று மோதியதில் அவர் படுத்தபடுக்கையானார். அவரது மனநலமும் பாதிக்கப்பட்டது. அவரது மகன் ஜோனதன் தந்தையின் வலி, வேதனை, வருமானமிழப்பு, மருத்துவச் செலவு, விபத்து தொடர்பான செலவுகளைக் கேட்டு வழக்கு தொடுத்தார்.
திரு கோ 2024ல் மரணமடைந்தார்.
கவனக்குறைவான செயலால் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக வேன் ஓட்டுநர் சாமிக்கண்ணு மாணிக்கவாசகத்திற்கு 2020ல் ஒரு வாரச் சிறையும் 18 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.