அறிவுத்திறன் குறைபாடு போன்ற பிரச்சினைகள் உடைய பிள்ளைகளுக்குச் சேவை வழங்கிவந்த சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளில் தற்போது மதியிறுக்கப் பிரச்சினையுடைய (Autism) மாணவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைண்ட்ஸ், ரெயின்போ சென்டர் போன்ற அமைப்புகள் இத்தகையோருக்காக மொத்தம் ஏழு பள்ளிகளை நடத்துகின்றன.
இவற்றில் ஏறக்குறைய 1,900 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் மதியிறுக்கப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள்.
மதியிறுக்கப் பிரச்சினை அடையாளம் காணப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில், ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு உடைய பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவதாக இரு அமைப்புகளும் கூறின.
சிங்கப்பூரில் தற்போது சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான 25 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 7 முதல் 18 வயது வரையிலான சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள் பயில்கின்றனர்.
மதியிறுக்கப் பிரச்சினை கொண்ட பிள்ளைகளுக்குச் சேவை வழங்க, 2032க்குள் மேலும் மூன்று பள்ளிகள் அமைக்கப்படவிருக்கின்றன.
மைண்ட்ஸ் பள்ளிகள் முன்னர் அறிவுத்திறன் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு மட்டும் சேவை வழங்கின. 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, அவற்றில் பயிலும் மதியிறுக்கப் பிரச்சினையுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை 60 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தற்போது மைண்ட்ஸ் அமைப்பு நடத்தும் நான்கு பள்ளிகளில் பயிலும் மொத்தம் 1,000க்கு மேற்பட்ட மாணவர்களில் ஏறத்தாழ 700 பேருக்கு அறிவுத்திறன் குறைபாடு, மதியிறுக்கப் பிரச்சினை இரண்டும் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அறிவுத்திறன் குறைபாடு என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணுதல், சிந்தித்துத் திட்டமிடல் போன்றவற்றில் சிரமத்தை எதிர்கொள்ளும் இயல்பு.
ஆனால், மதியிறுக்க பாதிப்பால் சமூகத்துடன் தொடர்புகொள்வதில் சிரமம், ஒரே செயலைத் திரும்ப திரும்பச் செய்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதனால் பாதிக்கப்பட்டோருக்கு ஒலி, ஒளி தொடர்பான மிக அதிக உணர்வுத்திறன் இருக்கும்.
ரெயின்போ சென்டர் நடத்தும் மார்கரெட் டிரைவ் பள்ளியிலும் ஈசூன் பார்க் பள்ளியிலும் மற்ற உடற்குறைகளுடன் ஒப்பிடுகையில் மதியிறுக்கப் பிரச்சினை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.
இரு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களில் 70 விழுக்காட்டினருக்கு மதியிறுக்கப் பிரச்சினை உள்ளது. மற்ற 30 விழுக்காட்டினருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ளன.
அதிகரிக்கும் தேவையைச் சமாளிக்க கடந்த அக்டோபர் மாதம் அட்மிரல் ஹில் பள்ளியைத் தொடங்கியதாக ரெயின்போ சென்டர் கூறியது.
அதன் மூன்று பள்ளிகளிலும் மொத்தம் 907 பிள்ளைகள் பயில்கின்றனர்.

