சிங்கப்பூரில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இருந்தாலும் வழக்கமானதைவிட தீவிர பாதிப்பு இருப்பதற்கான சான்று எதுவும் இல்லை என்று செப்டம்பர் 1ஆம் தேதி தொற்றுநோய் தடுப்பு நிலையம் (சிடிஏ) கூறியது.
சமூக அளவில் எடுக்கப்பட்ட சளிக்காய்ச்சலுக்கான மாதிரிகளில், காய்ச்சல் உறுதி செய்யப்படும் விழுக்காடு ஆகஸ்ட் 16 முதல் 22 வரையில் 36.6க்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் இது, 24 விழுக்காடாக இருந்தது.
ஆனால், இந்த அளவு, 2025ல் பதிவான உச்சகட்ட அளவான 43.9 விழுக்காட்டைவிடக் குறைவாகும்.
தேசிய கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள் காட்டிய சிடிஏ, பருவகால சளிக்காய்ச்சலுக்கான கிருமிகள் ஆண்டு முழுவதும் பரவினாலும் மே முதல் ஆகஸ்ட் வரையிலும், டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் அதன் தாக்கம் உச்சத்தில் இருப்பது வழக்கம் என்று கூறியது.
காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டைப் புண், குளிர், உடல் சோர்வு போன்றவை சளிக்காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகளாகும்.
பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போதோ, தும்மும்போதோ, பேசும்போதோ அல்லது பாடும்போதோ வெளிப்படும் சுவாசத் திவலைகள் அல்லது சிறிய துகள்கள் மூலமாக சளிக்காய்ச்சல் பரவுகிறது என்று சிடிஏ குறிப்பிட்டது.
இந்தத் திவலைகளை மற்றவர்கள் சுவாசிப்பதால் அல்லது அவை பிறரின் கண்கள், மூக்கு அல்லது வாயில் படுவதன் மூலமாக தொற்று பரவக்கூடும்.
சளிக்காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள், ஆண்டிற்கு ஒருமுறையாவது அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 65 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள், தீவிர மருத்துவ உபாதைகள் உள்ளவர்கள் இந்த ஆபத்தான பிரிவில் அடங்குவர்.
கடுமையான சுவாசத் தொற்றுக்கான லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள், அந்த அறிகுறிகள் முற்றிலும் நீங்கும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். அவர்கள் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சமூகத் தொடர்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும், உடல்நிலை பாதிப்புடைய நபர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


