கூடுதலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அதிக பயணங்களை மேற்கொள்வோருக்கு உகந்த ‘எல்லையற்ற’ கைப்பேசித் திட்டங்களை இதுவரை காணப்படாத அளவில் குறைந்த கட்டணத்துக்கு வழங்கிவருகின்றன.
இத்திட்டங்களுக்குக்கீழ் வாடிக்கையாளர்கள் கைப்பேசிகளில் இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அதிகத் தரவு அளவு (mobile data) வழங்கப்படுகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்கள் பயணம் மேற்கொள்வதற்கென இருக்கும் ‘ரோமிங்’ சேவைகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்காது.
ஆக அண்மையில் இதுபோன்ற, பயணிகளுக்கு உகந்த கைப்பேசித் திட்டங்களை வழங்கத் தொடங்கிய தொலைத்தொடர்பு நிறுவனம் எம்1. அது, மேக்ஸ் (Maxx) திட்டத்தின் மூலம் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பயன்படுத்த 290 ஜிபி அளவிலான தரவை மாதத்துக்கு வெறும் 7.90 வெள்ளிக்கு வழங்குகிறது.
இந்தோனீசியா, பங்ளாதேஷ், மலேசியா, தாய்லாந்து, தைவான் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான 10 ஜிபி தரவும் அத்திட்டத்தில் அடங்கும்.
முன்னதாக சிம்பா டெலிகாம் கடந்த ஜனவரி மாதம் சூப்பர்ரோம் 10 (SuperRoam 10) எனும் திட்டத்தின் மூலம் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான 5 ஜிபி தரவு உட்பட 300 ஜிபி அளவு தரவை வழங்கத் தொடங்கியது. அதே திட்டத்தின்கீழ் ஆசிய கண்டத்தில் உள்ள மேலும் ஏழு பகுதிகளுக்கான 12 ஜிபி தரவும் வழங்கப்படுகிறது.
இத்தகைய ‘எல்லையற்ற’ கைப்பேசித் திட்டங்களை சர்க்கல்ஸ்.லைஃப் நிறுவனம் முதலில் வழங்கத் தொடங்கியது. மெய்நிகர் தொலைத்தொடர்பு நிறுவனமான அது, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘எல்லையற்ற’ கைப்பேசி திட்டங்களை வழங்கத் தொடங்கியது.

