ஆண்டிறுதியில் சுவாசத்தொற்று அதிகரிப்பால் கடும் இருமல் சம்பவங்களில் ஏற்றம்

ஆண்டிறுதியில் சுவாசத்தொற்று அதிகரிப்பால் கடும் இருமல் சம்பவங்களில் ஏற்றம்

2 mins read
ceec967c-414c-450c-be82-9aa9876caf77
இடைவிடாத இருமலினால் சென்ற ஆண்டு இறுதியில் மீண்டும் மீண்டும் மருந்தகங்களுக்குத் திரும்பியோரின் எண்ணிக்கை அதிகரித்ததாக மருத்துவர்கள் கூறினர். - படம்: பிக்சல்ஸ்

சிங்கப்பூரில் சுவாசத்தொற்று அதிகரித்த நிலையில் சென்ற ஆண்டின் கடைசி சில மாதங்களில் இடைவிடாத இருமலினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குளிரான, ஈரமான வானிலை காரணமாக ஆண்டிறுதியில் இருமல் ஏற்படுவது பொதுவான ஒன்று என்றாலும் தொடர் இருமலுடன் மீண்டும் மீண்டும் தங்கள் மருந்தகங்களுக்குத் திரும்பிய நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பொது மருத்துவர்கள் கூறினர்.

சிங்கப்பூரின் 25 பலதுறை மருந்தகங்களில் சென்ற ஆண்டு இறுதியில் கடும் சுவாசத்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கூடியது.

டிசம்பர் 2ஆம் தேதியுடன் முடிவடையும் வாரத்திற்கான சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள்படி, பலதுறை மருந்தகங்களில் ஒரு நாளுக்கு கடும் சுவாச நோய்ச் சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 2,970ஆக இருந்தது. அதற்கு மறுவாரம் அந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,590க்குக் கூடியது.

ஆண்டிறுதியில் ஈரமான வானிலை காரணமாக கிருமிகள் உருவாவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படலாம் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ள சுவாச, தீவிரப் பராமரிப்பு மருந்துத் துறையின் தலைவர் டாக்டர் சேவா டூ வென் கூறினார்.

“கொவிட்-19 கிருமிப்பரவல் உச்சத்தில் இருந்தபோது மற்ற பொதுவான சுவாசத்தொற்றுச் சம்பவங்கள் குறைந்ததைக் காணமுடிந்தது. அதிக அளவில் பரவக்கூடிய கொவிட்-19 கிருமி மற்ற கிருமித்தொற்றுகளை மிஞ்சியதே அதற்குக் காரணம்.

“இப்போது சளிக்காய்ச்சல் போன்ற நோய்கள் மீண்டும் தலைதூக்குவதைப் பார்க்கிறோம். அடுத்தடுத்து ஏற்படும் இந்தக் கிருமிகளின் அறிகுறிகள், தொடர் நோய்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்,“ என்றார் டாக்டர் சேவா.

குறிப்புச் சொற்கள்