வீவக வீட்டு உரிமையாளர்கள் மலிவான வங்கிக் கடன்களுக்கு மாறுவது அதிகரிப்பு

வீவக வீட்டு உரிமையாளர்கள் மலிவான வங்கிக் கடன்களுக்கு மாறுவது அதிகரிப்பு

2 mins read
7e2d7edd-e2e5-4201-95ec-93e410826159
வீவகவின் கடன் வட்டி விகிதம் 2.6 விழுக்காடாக இருந்த வேளையில் வங்கிக் கடன் வட்டி விகிதம் அதைவிடக் குறைவாகப் பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக்கான கடனை மலிவான வட்டி வசூலிக்கும் வங்கிக் கடனுக்கு மாற்றுவது அதிகரித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீவகவின் கடன் வட்டியைக் காட்டிலும் வங்கிக் கடன் வட்டி விகிதம் மலிவாகி வருவதே அதற்குக் காரணம்.

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மூன்றாண்டு காணாத சரிவைச் சந்தித்து இருக்கும் வேளையிலும் சொத்துச் சந்தையில் போட்டித்தன்மை மிகுந்த வங்கிக் கடன் தொகுப்புகள் அதிகரித்து இருக்கும் நிலையிலும் கடன் நிதித் திட்டங்களை வங்கிகளுக்கு மாற்றுவதில் வீட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

குறிப்பாக, பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டின் தொடக்கம் முதலே அவர்கள் வங்கிக் கடன்களுக்கு மாறிவருவதாக உள்ளூர் வங்கிகளும் அடைமானக் கடன் தரகு நிறுவனங்களும் கூறின.

நிலையான (fixed-rate) மற்றும் மாறும் தன்மை (floating-rate) கொண்ட வட்டி வசூலிக்கும் வங்கிக் கடன் தொகுப்புகள் கடந்த ஆறு மாதங்களில் 1.55 விழுக்காட்டுக்கும் 1.8 விழுக்காட்டுக்கும் இடையிலான விகிதத்தில் சரிந்துவிட்டதாக ரெட்பிரிக் என்னும் அடைமானக் கடன் ஆலோசனை நிறுவனத்தின் இணை இயக்குநர் கிளைவ் சிங் கூறியுள்ளார்.

அதேநேரம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சலுகைக் கடனுக்கான வட்டி விகிதம் 2.6 விழுக்காடாக உள்ளது.

அதனால், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் அதிகமான நிலையான வட்டிக்கு வங்கிக் கடன் வாங்கிய வீவக வீட்டு உரிமையாளர்கள் கடனுக்கான ‘லாக்-இன்’ கால முடிவை எட்டியதும் குறைவான வட்டி விகிதத்திற்கு மாற ஆர்வம் காட்டியதாக டாலர்பேக் எனும் அடைமானக் கடன் ஆலோசனை நிறுவனத்தின் இணை இயக்குநர் ஜோயல் லிம் தெரிவித்துள்ளார்.

மாறும் தன்மை கொண்ட கடனுக்கான வட்டி விகிதம் 2023ஆம் ஆண்டு 3.6 விழுக்காடாக இருந்தது. கடந்த வாரம் அது 1.4 விழுக்காட்டுக்குச் சரிந்தது.

அக்டோபர் 30ஆம் தேதி மேலும் குறைந்து 1.34 விழுக்காடாக அது பதிவானது. கடந்த மூன்றாண்டுகளில் இதுவே ஆகக் குறைவான வட்டி விகிதம்.

அமெரிக்காவின் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை மேலும் குறைத்தால் இந்த வட்டி விகிதம் மேலும் குறையும் சாத்தியம் உள்ளது.

எனவே, வீட்டுக் கடன்களை மாற்றும் போக்கு 2026ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை நீடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்