வீடுகளுக்கான அரசாங்க உதவிமானியத்தைப் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
பல ஆண்டுகளாக, அரசாங்கம் வீடமைப்பு வசதியை அதிகரித்து வந்துள்ளது. அதன் பலன்களை நாம் தற்போது காண்கிறோம். பிடிஓ வீடுகளை முன்பதிவு செய்வதில் வெற்றி விகிதம் அதிகமாக உள்ளது; காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது; மேலும், மறுவிற்பனைச் சந்தை நிலைபெற்றுள்ளது.
இந்த முன்னேற்றங்கள், இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
தற்போதைய நிலையில், சிங்கப்பூரர்கள் தாமதமாகவே திருமணம் செய்துகொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நிலையை எட்டும்போது பலர் தங்கள் வாழ்க்கைத் தொழிலில் முன்னேற்றம் கண்டு, அதிக வருமானம் ஈட்டுபவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, அதிக எண்ணிக்கையிலான இளம் தம்பதியர் தற்போதைய வருமான உச்ச வரம்புகளைத் தாண்டும் நிலையை எட்டுகின்றனர்.
பெரும்பாலான சிங்கப்பூர் தம்பதியர் மானிய விலையிலான பொது வீடமைப்பு வீடுகளைத் தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்ய அரசாங்கம் விரும்புகிறது.
எனவே, வருமான உச்சவரம்பை உயர்த்தவுள்ளோம்.
பிடிஓ வீடுகளுக்கான வருமான உச்சவரம்பு $14,000லிருந்து $16,000ஆக உயர்த்தப்படும். அதேபோல, எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கான வருமான வரம்பு $16,000லிருந்து $18,000ஆக உயர்த்தப்படும்.
குழந்தைகள் இருந்தால் கூடுதல் வாய்ப்பு
குழந்தைகளைக் கொண்ட, முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்கள் விரைவாக வீட்டைப் பெற உதவ அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தற்போது, திருமணம் உறுதிசெய்யப்பட்ட மற்றும் திருமணமான தம்பதியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆனால், குழந்தைகளைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரர்களுக்கு இன்னும் கூடுதலான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
எனவே, புதிய வீட்டுக்கு விண்ணப்பிக்கும், முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்களில் ஏற்கெனவே பிள்ளைகள் இருந்தால் அல்லது பிறக்கவிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக ஒரு குலுக்கல் வாய்ப்பு வழங்கப்படும்.
இது, அவர்கள் வீட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கணிசமாக அதிகரிக்கும்.
எனவே, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்களோ அத்தனை குலுக்கல் வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில், வளர்ந்து வரும் குடும்பங்கள் விரைவாக ஒரு வீட்டைப் பெற உதவ நாங்கள் விரும்புகிறோம் என்றார் பிரதமர் வோங்.


