வரும் 2026ஆம் ஆண்டுமுதல் உயர்நிலைப் பள்ளியில் அதிகமான மாணவர் உயர் தாய்மொழியைப் படிக்கலாம்.
கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் தாய்மொழி கற்றல் நேரம் தற்போதைய ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரமாக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், தொடக்கப்பள்ளிகளில் வாசிப்புத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
சிங்கப்பூரில் தாய்மொழிக் கல்வியை மேலும் வலுவானதாக்க கல்வி அமைச்சு முன்னெடுக்கும் இந்தத் திட்டங்களை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் விவரித்தார்.
தாய்மொழி வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்றால் அம்மொழியுடன் நாம் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் அம்மொழி நம்மைவிட்டுச் சென்றுவிடும் என்று அவர் எச்சரித்தார்.
கல்வி அமைச்சும் மூன்று தாய்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுக்களும் இணைந்து ஏற்பாடு செய்த ‘வாழும் மொழிகளாக நம் தாய்மொழிகள்’ எனும் கருப்பொருளில் அமைந்த தாய்மொழிக் கருத்தரங்கு 2024இல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சர் உரையாற்றினார்.
தாய்மொழி எனும் சொத்தைப் பாதுகாக்க இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று கூறிய அமைச்சர், இருமொழி ஆற்றல் சிங்கப்பூரின் அடையாளம் என்றார். சிங்கப்பூரர்களுக்கு நன்மையளிப்பதும், சிங்கப்பூரர்களைத் தனித்துக் காட்டுவதும் இருமொழி ஆற்றல்தான் என்பதை அவர் வலியுறுத்தினார்.
பாலர் பள்ளிகளில் கூடுதல் நேரம்
இளவயதிலேயே தாய்மொழிக் கற்றலைத் தொடங்குவது, வலுவான அடித்தளமாக அமையும் என்ற அமைச்சர், 2025ஆம் ஆண்டிலிருந்து இரண்டு கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் (எம்கே@ஹவ்காங், எம்கே@இலியாஸ் பார்க்) தாய்மொழிக் கல்விக்கான நேரம் (MTL Exposure) 30 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் என்றார்.
முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்படும் இத்திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரமாக இருந்த தாய்மொழிக்கல்வி கற்கும் நேரம் ஒன்றரை மணி நேரமாக உயர்த்தப்படும். படிப்படியாக கல்வி அமைச்சின் மற்ற பாலர் பள்ளிகளுக்கும் இத்திட்டம் அறிமுகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கப் பள்ளிகளில் வாசிப்புத் திட்டம்
அடுத்த ஆண்டிலிருந்து தொடக்கநிலை மாணவர்களுக்காக ‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்’ (MTL SOAR) எனும் வாசிப்புத் திட்டம் இடம்பெறுகிறது.
ஆர்வத்தைத் தூண்டுவதையும், பிஞ்சுமனங்களைத் திறப்பதையும், பண்பாட்டு வேர்களை உணர வைப்பதையும், இருமொழி ஆளுமை பெறுவதையும் (Spark Interest, Open minds, Appreciate cultural roots, Rise as bilingual readers) நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம் தற்போதுள்ள பாடத்திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின்வழி, தொடக்கநிலை ஒன்று, இரண்டு மாணவர்களுக்கு, தாய்மொழிப் பாட நேரத்தில் வாசிப்பு, நூலக நடவடிக்கைகளுக்காகக் கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்படும்.
2029க்குள் அனைத்துத் தொடக்கநிலை மாணவர்களுக்கும் படிப்படியாக இத்திட்டம் விரிவாக்கப்படும்.
பள்ளிகளுக்கு வாசிப்புக் கடப்பிதழ்கள், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகள், தேசிய நூலக வாரியத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் பரிந்துரைக்கப்பட்ட வாசிப்புப் பட்டியல்கள் போன்றவையும் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
அதிகமானோர் உயர்தமிழ் படிக்கலாம்
வரும் 2026 முதல் தொடக்கப்பள்ளியின் இறுதித்தேர்வில் தாய்மொழியிலோ உயர் தாய்மொழியிலோ சிறந்த தேர்ச்சி பெற்றாலே மாணவர்கள் உயர்நிலை 1ல் உயர் தாய்மொழிப் பாடத்தை எடுக்க முடியும்.
அதிகமானோர் உயர் தாய்மொழி படிக்க வகைசெய்யும் இந்த மாற்றம் குறித்து தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
தற்போது, உயர்நிலைப் பள்ளியில் உயர்தமிழ் படிக்க மாணவர்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் (பிஎஸ்எல்இ) மொத்த அடைவுநிலை (AL) எட்டு அல்லது அதற்கும் குறைவாகப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 9 முதல் 14 வரை இருந்தால், ‘பிஎஸ்எல்இ’ தமிழ்மொழிப் பாடத்தில் அடைவுநிலை 1 அல்லது 2 அல்லது உயர்தமிழில் சிறப்புத் தேர்ச்சி / தகுதித் தேர்ச்சி (Distinction/Merit) பெற்றிருக்கவேண்டும்.
2026 முதல், தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு பெறும் மொத்த அடைவுநிலை எதுவாக இருப்பினும், அத்தேர்வில் தமிழில் ஏஎல்1/ஏஎல்2 அல்லது உயர்தமிழில் சிறப்புத் தேர்ச்சி / தகுதித் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளியில் உயர்தமிழ் படிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றார்.
மொழிப் புழக்கம் சமூகத்தின் கைகளில்
தாய்மொழி, வகுப்பறை தாண்டியும் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்களின் மொழிப் புழக்கத்தை அதிகரிப்பது சமூகத்தின் கைகளில் உள்ளது. வீடுகளிலும் தாய்மொழிப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கலை, ஊடகத் துறைகளில் வளரும் மொழிசார் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தொழில்நுட்பப் பயன்பாடு
செயற்கை நுண்ணறிவு, கல்வித் தொழில்நுட்பம் (EdTech) உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி தாய்மொழிக் கற்றலை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் பேசினார்.
சிங்கப்பூர் மாணவர்களின் கற்றல் தளங்களில் (SLS) மேம்படுத்தப்பட்டுள்ள வாசிப்பு மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி உச்சரிப்பு, சொல்லோட்டம் (Fluency) ஆகியவற்றிலுள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தலாம் என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சு தொடர்ந்து செயற்கை நுண்ணறிவின் ஆக அண்மைய முன்னேற்றங்களில் கவனம் செலுத்தி, அதனை மாணவர்களின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தும் என்றார் திரு சான்.
இதனிடையே, “அமைச்சர் முன்வைத்த மூன்று திட்டங்களும் நல்ல திட்டங்கள். பொதுவாக நம் சிறார்கள் கைப்பேசியை அதிகம் பயன்படுத்துவதால் வாசிப்புப் பழக்கம் குறைகிறது. அதனால் வகுப்பிலேயே வாசிப்புக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கினால் அவர்கள் வாசிப்பதும் மேம்படும்,” என்று தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர் விக்ரம் நாயர் கூறினார்.
“தமிழில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உயர்தமிழ்ப் பாடம் பயில வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதால் அம்மாணவர்கள் எதிர்காலத்தில் தமிழாசிரியர்களாக உருவெடுக்கலாம்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தாய்மொழிக் கருத்தரங்கு 2024
சன்டெக் சிட்டி மாநாட்டு, கண்காட்சி மையத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற 13ஆவது தாய்மொழிக் கருத்தரங்கில், தமிழாசிரியர் சுதா கந்தசாமி உட்பட ஏழு ஆசிரியர்களுக்குத் தலைசிறந்த பாலர் பள்ளி தாய்மொழி ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
மேலும், தமிழாசிரியர்கள் சியாமளா கணேசன், இராமச்சந்திரன் ஆனந்தி உட்பட ஏழு ஆசிரியர்களுக்கு ‘தகுதிசார் விருது’ வழங்கப்பட்டது.
தாய்மொழிக் கருத்தரங்கில் 40க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களும் பயிலரங்குகளும் இடம்பெற்றுள்ளன.

