சிங்கப்பூரின் உற்பத்தித்துறையின் உற்பத்தி, கடந்த ஜூலை மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உயிரியல் மருத்துவ உற்பத்தி மற்றும் ரசாயனத் துறைகளைத் தவிர்த்து, நாட்டின் ஏனைய துறைப் பிரிவுகளும் வளர்ச்சியைக் கண்டுள்ளதாகச் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதத்தில் அடைந்த திருத்தப்பட்ட 7.5 விழுக்காடு வளர்ச்சியைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் மொத்த தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 6.8 விழுக்காடு உயர்ந்துள்ளது.
புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் பொருளியல் நிபுணர்கள் கணித்திருந்த 6.7 விழுக்காடு வளர்ச்சியைவிட இது அதிகமாகும். அதேவேளையில், அதிக மாறுதல்களுக்கு உட்படும் உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறையைத் தவிர்த்துப் பார்க்கும்போது, உற்பத்தி 8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தில் துல்லியப் பொறியியல் துறை ஆக அதிகமாக ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 17.7 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இத்துறையின் கீழ் இயங்கும் இயந்திரங்கள் மற்றும் அமைப்புமுறைகள் பிரிவு, பகுதிமின்கடத்தி சாதனங்களின் கூடுதல் உற்பத்தியால் 18.2 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. மேலும், ஒளியியல் கருவிகள், மின்னணு இணைப்புகள், உலோகத் துல்லிய பாகங்கள் ஆகியவற்றின் உற்பத்தியால் துல்லியக் கூறுகள் பிரிவு 15 விழுக்காடு அதிகரித்தது.
சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் கிட்டத்தட்ட பாதியை வகிக்கும் மின்னணுவியல் துறை, தொடர்ச்சியான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேவையின் காரணமாக 11.2 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இதில் தகவல்-தொடர்பு மற்றும் பயனீட்டாளர் மின்னணுவியல் பிரிவுகள் 51.7 விழுக்காடும் பகுதிமின்கடத்தி உற்பத்தி 8 விழுக்காடும், கணினிப் புறச்சாதனங்கள் மற்றும் தரவுச் சேமிப்புப் பிரிவு 0.8 விழுக்காடும் வளர்ச்சி கண்டுள்ளன.
பொது உற்பத்தித் துறையின் உற்பத்தி 4.9 விழுக்காடு உயர்ந்தது. இதில் அச்சுப் பிரிவு 2.7 விழுக்காடும் உணவு, பானங்கள் மற்றும் புகையிலைப் பிரிவு 10.4 விழுக்காடும் வளர்ச்சி கண்டன. எனினும், கட்டட உலோகப் பொருள்கள் மற்றும் அறைகலன்களின் உற்பத்தி குறைந்ததால் இதர தொழிற்துறைகள் பிரிவு 5.9 விழுக்காடு சரிவைக் கண்டது.
போக்குவரத்துப் பொறியியல் துறை 10.8 விழுக்காடு அதிகரித்தது. தரை மற்றும் வான்வெளிப் பிரிவுகளின் வளர்ச்சி இதற்கு உறுதுணையாக இருந்தது. வான்வெளிப் பிரிவு விமானப் பாகங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தக ரீதியிலான பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகளால் 15.8 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றது. இருப்பினும், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைச் சாதனங்களின் உற்பத்தி குறைந்ததால் கடல்சார் மற்றும் கரைக்கடல் பொறியியல் பிரிவின் பின்னடைவு இந்த வளர்ச்சியைச் சற்று சமன்செய்தது.


