மோசடிக்கு உதவ சிங்கப்பூர் வரும் மலேசியர் எண்ணிக்கை அதிகரிப்பு

மோசடிக்கு உதவ சிங்கப்பூர் வரும் மலேசியர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
3f1db00c-3e53-4d1c-8afe-39af02642f13
மார்ச் மாதம் முதல் இதுவரை 17 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மோசடிக் கும்பல்களுக்கு உதவியதாக மேலும் ஒரு மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த 34 வயது ஆடவர், மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மோசடிக் கும்பல்களுக்கு உதவியதாக மார்ச் மாதம் முதல் இதுவரை 17 மலேசியர்கள் பிடிபட்டுள்ளதாகவும் காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மோசடியில் சிக்கி ஏமாறுவோரிடம் இருந்து ரொக்கத்தையும் மதிப்புமிக்க பொருள்களையும் பெற்று அவற்றை மோசடிக் கும்பல்களிடம் சேர்ப்பதற்காக மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வரும் போக்கு அதிகரித்துள்ளதாக அது கூறியது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆடவர்மீது சனிக்கிழமை (ஏப்ரல் 25) குற்றம் சுமத்தப்பட உள்ளது. குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட பலன்களைத் தக்கவைத்துக்கொள்ள மற்றொருவருக்கு உதவியதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்படலாம். அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அதிகபட்சம் $500,000 அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

ஆகக் கடைசியாக, ஏப்ரல் 14ஆம் தேதி காவல்துறைக்குப் புகார் ஒன்று வந்தது. எம்1 தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் குறிப்பிட்ட, முன்பின் தெரியாத நபரிடம் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாக, மோசடியில் சிக்கியவர் செய்த புகார் அது.

ஈராண்டுக் கைப்பேசித் திட்டம் ஒன்றில் தம்மைச் சேர்த்திருப்பதாக அந்த மர்ம நபர் குறிப்பிட்டதாகவும் அதற்கு மறுத்ததும் மோசடிக்காரர்கள் அந்த அழைப்பைச் சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகளுக்கு மாற்றிவிடுவதாகச் சொன்னதாகவும் புகாரில் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

பண மோசடி தொடர்பாக விசாரிக்கப்படுவதாகப் பொய்யாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மோசடிக்காரர்கள் அவசரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தினர்.

மோசடியிலிருந்து தப்பிக்க $21,000 அனுப்புமாறு அந்தப் போலி அதிகாரிகள் கேட்டதும் அது மோசடிச் செயல் என்று சந்தேகித்த அந்தப் பெண், அது குறித்துக் காவல்துறையில் புகார் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்