சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் கணினி தொடர்பான படிப்பை நாடும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
afb99aff-9b8c-4825-8dff-5ef1323a6e46
சிங்கப்பூரின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி காரணமாக இத்துறை சார்ந்த பட்டதாரிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிக போட்டித்தன்மையுடன் அதிவிரைவாக மாறிவரும் தொழில்நுட்பத் துறையில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாக சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) ஆகியவற்றில் கணினி மற்றும் அது தொடர்பான படிப்பை மேற்கொள்ளும் இளையர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 73% உயர்ந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

என்யுஎஸ் கணினிப் பள்ளியிலும் அதன் கணினிப் பொறியியல் படிப்பிலும் 2019ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 68% அதிகரித்துள்ளது. முன்பு 3,498ஆக இருந்த எண்ணிக்கை 5,878ஆக உயர்ந்தது.

கணினி தொடர்பான படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை 2019/2020 கல்வியாண்டில் 1,987ஆக இருந்து 2023/2024 கல்வியாண்டில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 3,156 எனப் பதிவானதாக என்டியு தரவுகள் கூறுகின்றன.

அதேபோல், எஸ்எம்யுவின் கணினி அறிவியல் பட்டப் படிப்பில் சேர்ந்தோரின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 49ஆக இருந்து 2023ல் 578 ஆனது.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, கணினிப் பயன்பாடு, கணினிப் பொறியியல், தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் ஆர்வம் அதிகரித்துள்ளதாக என்யுஎஸ் தெரிவித்தது.

அதிக போட்டித்தன்மை

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வு முடிவுகளைப் பல்கலைக்கழகங்கள் வெளியிடும்போது, அடிக்கடி கணினிசார் பட்டதாரிகளுக்கான ஆரம்ப சம்பளமே ஆக அதிகம் என்று கண்டறியப்படுகிறது.

உதாரணத்திற்குப் புதிதாகப் பட்டம் பெறுவோரின் ஆரம்ப மாத சம்பளம் சராசரியாக $4,313. ஆனால், என்யுஎஸ் கணினி அறிவியல் பட்டதாரிகளின் இடைநிலை மாத சம்பளம் $6,181ஆக இருந்ததாக 2023 ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி காரணமாக இத்தகைய பட்டதாரிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறையின் மதிப்பு $106 பில்லியன், அதாவது சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்