சிக்லாப் டிரைவ் பகுதியில் உள்ள 16 கடைவீடுகளின் வாடகை அதிகரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சென்ற ஆண்டிலிருந்து அப்பகுதியில் குறைந்தது மூன்று வர்த்தகங்கள் மூட நேரிட்டது. மேலும் இரண்டு வர்த்தகங்கள், இவ்வாண்டிறுதிக்குள் மூடவிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
ஒதுக்குப்புறமாக இருக்கும் அக்கடைவீடுகளுக்கு அதிகமானோர் வந்துசெல்வதில்லை, அவை பெருவிரைவு ரயில் நிலையங்களுக்கு அருகிலும் இல்லை. அதனால் அவை இவ்வளவு வாடகை பெறும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றார் சிக்லாப் டிரைவில் கடை நடத்தும் வர்த்தகர்களில் ஒருவரான ஹெய்டி டான்.
அவர், ஃபுளோர் பேட்டிசரி (Flor Patisserie) எனும் கேக் கடையை அங்கு 12 ஆண்டுகளாக நடத்திவருகிறார். வரும் ஜூலை மாதத்துக்குள் அங்குள்ள தனது வர்த்தகத்தை மூட அவர் திட்டமிட்டுள்ளார். அவரது கடைக்கான மாத வாடகை 5,400 வெள்ளியிலிருந்து 8,500 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டது அதற்குக் காரணம்.
வாடகை பெரிய அளவில் உயர்த்தப்பட்டதை திருவாட்டி டான் கடந்த ஏப்ரல் மாதம் சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அப்பதிவு, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது, பல ஊடகங்கள் அதுகுறித்து செய்தி வெளியிட்டன.
திருவாட்டி டானின் பதிவு, பல இடங்களில் வர்த்தகர்கள் அதிகரிக்கும் வாடகையைச் சமாளிக்கவேண்டிய நிலைக்கான எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 16ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிக்லாப் டிரைவுக்கு நேரில் சென்றது. அங்குள்ள 16 கடைப்பகுதிகளில் ஆறு காலியாக இருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.
பாதிக்கப்பட்ட வர்த்தகர்களில் ஒருவர், தான் செலுத்திவந்த 5,000 வெள்ளி வாடகை இருமடங்கானதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி டானைப் போலவே சிக்லாப் டிரைவில் இதர வர்த்தகர்கள் சிலரும் உயரும் வாடகை குறித்து கவலை தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

