முதல் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு, வேலைக் காலியிடங்கள் குறைந்தன

முதல் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு, வேலைக் காலியிடங்கள் குறைந்தன

2 mins read
f57771ab-8d5c-4dd2-b6d5-b3d0e15c6dba
இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பு உச்சத்தை எட்டியுள்ளது. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலைக் காலியிடங்கள் குறைந்ததால் சிங்கப்பூரின் வேலைவாய்ப்புச் சந்தை இவ்வாண்டின் முதல் காலாண்டில் பலவீனமடைந்தது.

கடந்த டிசம்பர் மாதம் 77,700ஆகப் பதிவான வேலைக் காலியிடங்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 73,300ஆகக் குறைந்தது மனிதவள அமைச்சின் வேலைச் சந்தை அறிக்கையில் தெரியவந்தது.

தொழில்முறைத் திறனாளர் அல்லாதோர், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்ததே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் என அமைச்சு குறிப்பிட்டது.

மேலும், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்குறைப்பு விகிதம் உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் ஆட்குறைப்பு எண்ணிக்கை 3,690ஆக இருந்த நிலையில், இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் அது 3,830ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பட்டதாரிகளிடையே ஆட்குறைப்பு மிகக் கடுமையாக அதிகரித்ததாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

மேலும், வணிக மறுசீரமைப்பு, மறுகட்டமைப்பு போன்றவை ஆட்குறைப்புக்கான முக்கியக் காரணிகளாக உள்ளன என்று அமைச்சு தெரிவித்தது.

இருப்பினும், முந்தைய காலாண்டில் நிதிச் சேவைத்துறையில் 4,300ஆக இருந்த வேலைக் காலியிடங்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 5,800ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், பணிநீக்கம் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் மீண்டும் ஊழியரணியில் சேர்ந்தோர் விகிதம், 57.4 விழுக்காட்டிலிருந்து 60.7 விழுக்காடாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர் தொழிலாளர் சந்தை தொடர்ந்து விரிவடைந்து, வேலைவாய்ப்புகள் 9,400ஆக அதிகரித்தன.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கான வேலைவாய்ப்புகள், முந்தைய காலாண்டில் 3,100ஆகப் பதிவான நிலையில், இவ்வாண்டின் முதல் காலாண்டில் 5,400ஆக அதிகரித்துள்ளன.

‘ஸ்டார் ஃபர்னிச்சர்’ கிடங்கிற்குத் சென்றிருந்தபோது மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் செய்தியாளர்களிடம் பேசினார்.
‘ஸ்டார் ஃபர்னிச்சர்’ கிடங்கிற்குத் சென்றிருந்தபோது மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் செய்தியாளர்களிடம் பேசினார். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்னிலக்க, அறிவுசார் துறைகளில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதாகக் கூறும் மனிதவள அமைச்சின் கணக்கெடுப்பு ஒன்றை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சுட்டிக்காட்டினார்.

“செயற்கை நுண்ணறிவுப் பயனர்களில் 85 விழுக்காட்டினர் உற்பத்தித்திறனில் முன்னேற்றம், நேரச் சேமிப்பு மற்றும் வேலையின் தரம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்,” என்றார் டாக்டர் டான்.

‘ஸ்டார் ஃபர்னிச்சர்’ கிடங்கிற்குத் திங்கட்கிழமை (ஜூன் 15) சென்றிருந்தபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அங்குச் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஒரு பாரந்தூக்கியையும் அவர் பார்வையிட்டார்.

அதிகமான நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதால், பணியாளர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் மாறிவரும் வேலைத் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் முடிகிறது என்றார் அவர்.

“பணியிட முறைகளை நிச்சயமாக செயற்கை நுண்ணறிவு மாற்றியமைக்கும். வேலைகளை முழுமையாக நீக்குவதற்குப் பதிலாக அவற்றை மறுவடிவமைக்கவே அது உதவும்,“ என்று அமைச்சர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
வேலைவாய்ப்புசந்தைஆட்குறைப்புதொழிலாளர்மனிதவள அமைச்சு