சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டு 16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மார்ச் 29ஆம் தேதி தரவுகளைப் பகிர்ந்தது.
தரவுகள்படி 2024ஆம் ஆண்டு பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் 943ஆகப் பதிவானது. ஆனால் அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு 1,031ஆக அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு அது 998ஆகப் பதிவானது.
பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் குடும்பத்தினருக்குத் தொடர்புடைய சம்பவங்களும் கடந்த ஆண்டு கூடியுள்ளது.
2024ஆம் ஆண்டில் அது 184ஆகப் பதிவானது. ஆனால் அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு 192ஆக அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு அது 169ஆகப் பதிவானது.
சிறு வயதில் பிள்ளைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் நெடுங்காலம் வரை ஆறாத வடுவாக இருக்கும் என்று மூத்த உளவியலாளர் டாக்டர் அனபெல் சோ கூறுகிறார்.
“பாலியல் துன்புறுத்தல்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் நடப்பது மிகப் பெரிய கொடுமை. நம்பிக்கைக்கு உரியவர்களால் நடக்கும் இந்த இழிச்செயல் பிள்ளைகளைப் பெரிதாகப் பாதிக்கிறது,” என்றார் டாக்டர் அனபெல்.
“20 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட நபர், இப்போதும் தினம் தினம் அதை நினைத்து வருத்தப்படுகிறார்,” என்றார் டாக்டர் அனபெல்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு மட்டும் 2,566 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 10 விழுக்காடு அதிகம். 2024ஆம் ஆண்டில் 2,340 சம்பவங்கள் பதிவாகின.
வன்கொடுமை, மானபங்கம், விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்வது உள்ளிட்டவை பாலியல் துன்புறுத்தலின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

