வன்போலி (deepfake) மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கும் போக்கு அதிகரித்து வருவதாக சிங்கப்பூரில் உள்ள சமூக ஆர்வலர்களும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்களும் அக்கறை தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் வன்போலிக்கான சேவைகள் எளிதாகக் கிடைப்பதால் சிங்கப்பூரில் உள்ள பலரை மோசடிக்காரர்கள் குறிவைக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் வன்போலி மென்பொருள்களால் ஒருவரின் புகைப்படத்தைக் கொண்டு எளிதாக ஆபாசமான படங்கள், காணொளிகளை சில நொடிகளில் தயார் செய்யலாம்.
இதற்கு முன்னர் ‘போட்டோஷாப்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரபலங்களை குறிவைத்து போலியான ஆபாசமானப் படங்கள் தயாரிக்கப்பட்டன, ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் வன்போலியை உருவாக்கி யாரை வேண்டுமானாலும் அச்சுறுத்தலாம்.
தென்கொரியா போன்ற நாடுகளில் வன்போலியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது எடுக்கப்பட்ட படங்கள் வன்போலி மூலம் மாற்றப்பட்டு டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அது அந்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் நடக்கும் இந்த அச்சுறுத்தலை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மற்ற நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கப்பூரில் உள்ள சமூக ஆர்வலர்களும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள பலர் வன்போலியால் பாதிக்கப்படவில்லை, இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

