வழக்கமான ஆண்டிறுதித் தேர்வுகள், கட்டுரைச் சமர்ப்பிப்புகளுக்குப் பதிலாக, மாணவர்களின் பாடங்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் சிந்தனை ஆற்றலையும் மதிப்பிடும் புதிய தேர்வு முறைகளுக்குச் சிங்கப்பூர் உயர்கல்வி நிலையங்கள் மாறிவருகின்றன.
சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், அத்தகைய மாற்றங்கள் மிகவும் அவசியமாகின்றன எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தொடர்பியல் வகுப்பில், மாணவர்கள் தங்களின் புதிய செயலிகளைப் பற்றி ஐந்து நிமிடங்கள் வகுப்பறையில் விளக்கமளிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, சக மாணவர்களும் பேராசிரியர்களும் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்.
ஆயத்த உரைகள் ஏதுமின்றி, கேட்கப்படும் கேள்விகளுக்குத் தன்னிச்சையாகப் பதிலளிக்கும் திறனைச் சோதிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
அவர்களின் இறுதி மதிப்பெண்களில் 30 விழுக்காட்டை அந்த அமர்வு தீர்மானிக்கிறது.
அதேபோல, மற்றொரு வகுப்பில் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், வகுப்பறையிலேயே 15 நிமிடங்களில் சொந்தமாகப் பதில்களை எழுத வைப்பதன் மூலம் அவர்களின் சிந்தனைத் திறன் மதிப்பிடப்படுகிறது.
வகுப்பறையில் கட்டுரையை எழுத வைப்பதன் மூலம், மாணவர்கள் ‘ஏஐ’யைக் குறுக்குவழியில் பயன்படுத்துவதைத் தடுக்கலாம்.
மேலும், பாடங்கள் குறித்த அவர்களின் புரிதலைப் பேராசிரியரால் நேரடியாகக் கண்டறியவும் முடிகிறது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உள்ளூர் பல்கலைக்கழகங்கள், மாணவர்களின் படைப்புகளில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டைக் கண்டறியும் மென்பொருள்களை அகற்றிவருகின்றன.
அத்தகைய கருவிகள் துல்லியமற்ற முடிவுகளைத் தருவதோடு, மாணவர்களின் சொந்த படைப்புகளையும் ‘ஏஐ’ என அவை தவறாகச் சுட்டிக்காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக, வாய்மொழி விளக்கக்காட்சிகள், புகைப்படக் காட்சித் தளங்கள், படிநிலைகளுடன்கூடிய சமர்ப்பிப்புகள் போன்ற பலமுறைச் சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவைக் கற்றல் திறனை செயலிழக்கச் செய்யாமல், மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன், ஆக்கபூர்வ சிந்தனையை மேம்படுத்தும் வகையில் இப்புதிய மதிப்பீட்டு முறைகள் வடிவமைக்கப்படுகின்றன.
‘ஏஐ’ நிறைந்த எதிர்காலப் பணியிடங்களுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தவும் அதே வேளையில், அத்தொழில்நுட்பம் மாணவர்களின் அடிப்படைச் சிந்தனையையும் கற்றல் திறனையும் மாற்றிவிடாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அத்தகைய படைப்பாற்றல்மிக்க மதிப்பீட்டு முறைகள் இன்றியமையாதவை எனப் பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


