வெளிநாட்டு மாணவர்களால் சிங்கப்பூரில் இணைவசிப்பிடங்களுக்கான (Co-Living space) தேவை அதிகரித்து வருவதாக ஜேஎல்எல் சொத்து ஆலோசனை நிறுவனம் புதன்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
சில இணைவசிப்பிடங்களில் தங்கியுள்ளோரில் 25 முதல் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டு மாணவர்கள் என அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இணைவசிப்பிடங்களில் வசிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023 ஜூன் மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் 70,800 வெளிநாட்டு மாணவர்கள் இருந்தனர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணிக் கல்வி நிலையங்களிலும் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை கணிசமான அளவில் இருந்தது.
சிங்கப்பூரில் குடியிருப்பாளர் அல்லாத மக்கள்தொகையில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு நான்கு விழுக்காடு என ஜேஎல்எல் அறிக்கை குறிப்பிட்டது.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பின் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளதால், 2025-2031 காலகட்டத்திற்கான உயர்கல்விச் சந்தையின் கூட்டு வருடாந்தர வளர்ச்சி 6.7 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் குடியிருப்பாளர் அல்லாதோரின் விகிதம் 30 விழுக்காடு. அவர்களின் எண்ணிக்கை, 2024 ஜூன் நிலவரப்படி, ஆண்டு அடிப்படையில் ஐந்து விழுக்காடு வளர்ச்சி கண்டது.
இப்படி, வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையும் குடியிருப்பாளர் அல்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் வாடகைத் தங்குமிடம் மற்றும் இணைவசிப்பிடங்களுக்கான தேவை கூடியுள்ளது.
இதனால், இணைவசிப்பிடங்களில் முதலீடு செய்வதும் $200 மில்லியனைத் தாண்டிவிட்டதாக ஜேஎல்எல் அறிக்கை தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2022, 2023ஆம் ஆண்டுகளில் அத்தொகை ஏறத்தாழ $200 மில்லியனாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது $800 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது.
ஹோட்டல்கள், அலுவலகங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை இணைவசிப்பிடங்களாக மாற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது.
அவ்வகையில், ‘தி பேரோன் பை கோவ்’ கூட்டுரிமைக் குடியிருப்பில் இருந்த 63 தனியார் வீடுகள் 304 இணைவசிப்பிட அறைகளாக மாற்றப்பட்டன.
கடந்த 2024 நவம்பரில் அத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வாடகைதாரர்களில் 48 விழுக்காட்டினர் மாணவர்கள்; எஞ்சிய 52 விழுக்காட்டினர் வேலைக்குச் செல்வோர். அவர்களில் பெரும்பாலார் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் அதிகமானவர்கள் சீனா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

