2026ல் பொங்கோலில் ஓட்டுநரில்லா வாகனச் சோதனைகள் அதிகரிப்பு

2 mins read
216d0f24-aa71-43e2-af20-ed40b0ecabee
சிங்கப்பூரின் பொங்கோல் வட்டாரத்தில் வீரைட் மற்றும் கிராப் நிறுவனங்கள் முதலாவது ஓட்டுநரில்லா வாகனச் சோதனையை நடத்தியுள்ளன. - படம்: கிராப்

பொங்கோலில் ஓட்டுநரில்லா வாகனங்களின் சோதனை முடுக்கிவிடப்படும். இரண்டு இணைப்புச் சேவை வழித்தடங்களில் 11 ஓட்டுநரில்லா வாகனங்களைச் சோதனை செய்ய அனுமதிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அக்டோபர் மாத நடுப்பகுதியில் பொங்கோலில் இடம்பெறும் முதலாவது ஓட்டுநரில்லா வாகனச் சோதனையைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்படும்.

இந்தச் சோதனைகளை, 2024 முதல் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் குவாங்சோவை தளமாகக் கொண்ட ஓட்டுநரில்லா வாகன நிறுவனமான வீரைட் (WeRide) உடன் இணைந்து, வாடகை வாகன நிறுவனமான கிராப் (Grab) நடத்துகிறது.

2026ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், தங்கள் ஓட்டுநரில்லா வாகனங்கள் பொதுப் பயணிகளைக் கொண்ட முதலாவது பிரிவினரை ஏற்றிச் செல்லத் தயாராக இருக்கும் என்று அந்நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்திருக்கும் என்று அந்நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. ஆனால், எத்தனை வாகனங்கள் இதில் ஈடுபடுத்தப்படும் என்பதை அவை தெரிவிக்கவில்லை.

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ஓட்டுநரில்லா வாகனங்களின் சோதனை ஓட்டங்களின் எண்ணிக்கையை நான்கு மடங்கு வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனங்கள் மேலும் தெரிவித்தன.

பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு நடத்துநர்களைக் கொண்ட முதல் பிரிவினருக்கான பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயிற்சியாளர்கள் சாலை விதிமுறையை விளக்கும் பாடங்கள், பயிற்சித் தட செயல்முறை பாடங்களுக்குப் பிறகு, பொங்கோல் பகுதியில் சாலையில் ஓட்டுநரில்லா வாகனத்தைக் கண்காணிக்கும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

சோதனையின்போதும், பொதுச் சவாரிகளின் ஆரம்ப கட்டத்திலும் நிகழ்நேர மேற்பார்வையை வழங்க, பாதுகாப்பு நடத்துநர்கள் ஓட்டுநரில்லா வாகனங்களில் இருக்க வேண்டும்.

கிராப் மற்றும் வீரைட் நிறுவனங்கள் இயக்கும் இரண்டு இணைப்புச் சேவை வழித்தடங்கள், பொங்கோலில் வசிப்பவர்களைப் பொங்கோல் கோஸ்ட் எம்ஆர்டி நிலையம், பொங்கோல் கோஸ்ட் பேருந்துச் சந்திப்பு நிலையம், கடைத்தொகுதிகள், பலதுறை மருந்தகம் போன்ற முக்கிய இடங்களுடன் இணைக்கும்.

குறிப்புச் சொற்கள்