சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் மனிதவளத் தேவை குறைந்ததற்கான அறிகுறி தென்பட்டாலும் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் 77,500 வேலைவாய்ப்புகள் இருந்தன. இவ்வாண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 81,100க்கு உயர்ந்தது. 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குரிய ஊழியர் சந்தை அறிக்கையை மனிதவள அமைச்சு வெளியிட்டது.
பெரும்பாலான துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகள் இருந்தன. இருப்பினும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் 8,200லிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் 8,000க்குக் குறைந்தது.
எனினும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்த புதிய வரிகளின் தாக்கத்தை அந்த எண்ணிக்கை இன்னும் பிரதிபலிக்கவில்லை.
வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மனிதவள அமைச்சு ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து துறைகளையும் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதாகத் தெரிவித்தது.
குறிப்பிட்ட வரிகள் குறைக்கப்பட்டது குறித்தும் அவற்றில் ஒரு பகுதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறித்தும் கருத்துகள் திரட்டப்பட்டன.
ஜனவரியிலிருந்து மார்ச் வரை 40.5 விழுக்காட்டு நிறுவனங்கள் அடுத்த காலாண்டில் வேலைக்கு ஊழியர்களைச் சேர்க்க திட்டமிடுவதாகக் கூறின.
ஏப்ரல், மே மாதங்களில் அந்த எண்ணிக்கை சற்று உயர்ந்து 42.2 விழுக்காடானது.
தொடர்புடைய செய்திகள்
சம்பளத்தை உயர்த்த விரும்பும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் ஏறக்குறைய 21.2 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த திட்டமிடுகின்றன.
ஊழியர் சந்தை அறிக்கையின்படி ஆட்குறைப்பு விகிதம் சற்று குறைந்தது.
கடந்த ஆண்டு நான்காம் காலாண்டில் 3,860ஆக இருந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 3,590க்குக் குறைந்தது.
எனினும், உற்பத்தி, கட்டுமானம், போக்குவரத்து ஆகிய துறைகளில் ஆட்குறைப்பு எண்ணிக்கை உயர்ந்தன.