சிங்கப்பூரில் நிலவி வரும் புகைமூட்டமான சூழலால், அதுதொடர்பான பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உள்ளூர் மருந்தகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களாக நீடிக்கும் புகைமூட்டத்தால், சில மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
நோயாளிகளுக்குச் சுவாசப் பிரச்சினைகள் மட்டுமன்றி, கண் அரிப்பு, தோல் பாதிப்புகள் போன்ற சிக்கல்களும் ஏற்படுகின்றன.
நீண்ட நேரம் வெளிப்புறங்களில் இருப்பது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே ஏற்கெனவே உள்ள உடல்நலப் பாதிப்புகளை மேலும் மோசமாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அண்டை நாடான மலேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், கடந்த சில வாரங்களாகச் சிங்கப்பூர் புகைமூட்டமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. காற்றில் எரியும் வாடை அதிகமாக உணரப்படுவதாகவும் குறிப்பாக இரவு நேரங்களிலும் தீவின் கிழக்குப் பகுதிகளிலும் இது அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், காற்றின் தரக் குறியீடுகள் பெரிய அளவில் சரிவைக் காட்டவில்லை. 24 மணிநேரப் புகைத் தரக் குறியீடு நல்ல அல்லது மிதமான நிலையிலேயே உள்ளது. ஒரு மணிநேர பிஎம் 2.5 அளவீடுகளும் சாதாரண நிலையிலேயே நீடிக்கின்றன.
வட்டார நாடுகளில் நிலவும் காடு மற்றும் நிலக்கரிப் பாங்கான பகுதிகளில் ஏற்படும் தீயினால் இத்தகைய எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்படுகிறது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த வியாழக்கிழமையன்று (மார்ச் 26) ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
“இந்தத் தீ விபத்துகள் புகைத் துகள்களை உருவாக்குவதுடன், பல்வேறு எரிவாயுக் கலவையையும் உருவாக்குகின்றன. இதுவே ஒருவித நெடியுடன் கூடிய எரிந்த வாடையை ஏற்படுத்துகிறது,” என்று வாரியம் கூறியது.
மார்ச் மாத இறுதியில் நிலவும் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை காரணமாக, தீப்பிடிக்கும் இடங்கள் அதிகரிக்கவும் புகைமூட்ட அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மார்ச் 20ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட முந்திய பதிவில் வாரியம் குறிப்பிட்டிருந்தது.

