சிறுநீரகச் செயலிழப்புப் பாதிப்பு அதிகரிப்பு: வீட்டிலேயே அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு முக்கியத்துவம்

சிறுநீரகச் செயலிழப்புப் பாதிப்பு அதிகரிப்பு: வீட்டிலேயே அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு முக்கியத்துவம்

3 mins read
cf685fa6-5854-4f7c-a836-f7415a0d5cd7
திங்கட்கிழமையன்று (மார்ச் 23) கிம் கியட் சாலையில் உள்ள தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் புதுப்பிக்கப்பட்ட தலைமையகத்தின் திறப்பு விழாவில் பேசினார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறுநீரகச் செயலிழப்புப் பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நான்கு பொது மருத்துவமனைகளுடன் இணைந்து மூன்று ஆண்டுகால முயற்சியை தேசிய சிறுநீரக அறக்கட்டளை தொடங்கியுள்ளது. இதன் மூலம் வீட்டிலேயே செய்யப்படும் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ எனும் சிகிச்சை முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இது ஊசி தேவையில்லாத, வீட்டிலேயே செய்யக்கூடிய ரத்த சுத்திகரிப்புச் சிகிச்சை. இது உடலின் கழிவுகளையும் அதிகப்படியான திரவத்தையும் அகற்ற வயிற்றின் உட்புறப் படலத்தை ஓர் இயற்கை வடிகட்டியாகப் பயன்படுத்துகிறது.

மறைந்த திரு கூ டெக் புவாட்டின் சொத்திலிருந்து வழங்கப்பட்ட $3 மில்லியன் நன்கொடை உதவியுடன், 300 நோயாளிகள் இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்ள ஆதரவளிக்க இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ரத்த சுத்திகரிப்புக்கான அவசரநிலைக்கு முன்னரே நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் வீட்டிலேயே மேற்கொள்ளும் சிகிச்சை முறைகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சிறுநீரகப் பிரிவில் இரண்டு தாதியரை நியமித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டான் டோக் செங் மருத்துவமனை, தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் கூ டெக் புவாட் மருத்துவமனை ஆகியவற்றிலும் தேசிய சிறுநீரக அறக்கட்டளை தனது தாதியரை நியமிக்கவுள்ளது.

மக்கள் தொகை விரைவாக மூப்படைந்து வருவதால் நாட்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களின் எண்ணிக்கையும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நோய்க்கான இரண்டு பொதுவான காரணங்களான நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஓரளவிற்கு நிலையாக இருந்தபோதிலும், சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது ஏறத்தாழ 500,000 பேர் நாட்பட்ட சிறுநீரக நோயுடன் உள்ளனர். அதேவேளையில், இறந்த ஒருவரிடமிருந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கான சராசரி காத்திருப்புக் காலம் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளாகவே நீடிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், நோயாளிகள் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ முறையை மேற்கொள்ள உதவும் முயற்சியை தேசிய சிறுநீரக அறக்கட்டளை விரிவுபடுத்தியுள்ளது. இதில் ‘மான் ஃபுட் டோங்’ மற்றும் ‘சிங்கப்பூர் கிறிஸ்டியன் ஹோம்’ போன்ற தாதிமை இல்லங்களில் தங்குவோருக்கு உதவ இல்லங்களின் ஊழியர்களுக்கு இந்தச் சிகிச்சை முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது வழக்கமான ரத்த சுத்திகரிப்பு முறை முதன்மையான முறையாக இருந்தாலும், நோயாளிகளுக்கு அதிக நீக்குப்போக்குத் தன்மையையும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் வழங்குவதால் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ முறையே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.

வீட்டிலேயே நோயாளியால் தினமும் செய்யப்படும் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ சிகிச்சை, ரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்ட வயிற்றின் உட்புறப் படலத்தைப் பயன்படுத்துகிறது. இதற்கு குறைவான வளங்களும் உள்கட்டமைப்புகளுமே போதுமானது.

மாறாக, வழக்கமான ரத்த சுத்திகரிப்பு செய்ய நோயாளிகள் பொதுவாக வாரத்திற்கு மூன்று முறை அதற்கான நிலையங்களுக்குச் செல்ல வேண்டும். அங்கு தாதியரால் வழங்கப்படும் இந்தச் சிகிச்சை ஏறத்தாழ நான்கு மணி நேரம் நீடிக்கும். தற்போது தேசிய சிறுநீரக அறக்கட்டளையிடம் 45 ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவை அனைத்தும் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான பயன்பாட்டு விகிதத்தைக் கொண்டுள்ளன.

பல நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியாகப் பொருத்தமானதாக இருந்தபோதிலும், ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ முறை இன்னும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. ஐந்து நோயாளிகளில் ஒருவர் (20 விழுக்காடு) மட்டுமே இதனைத் தேர்ந்தெடுக்கின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று நோயாளிகளில் ஒருவர் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ முறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

திங்கட்கிழமையன்று (மார்ச் 23) கிம் கியட் சாலையில் உள்ள தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் புதுப்பிக்கப்பட்ட தலைமையகத்தின் திறப்பு விழாவில் பேசினார் அமைச்சர் ஓங்.

“சிறுநீரகச் செயலிழப்பு என்பது மிகவும் சவால்மிக்க உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. அதனால்தான் பொருத்தமான நோயாளிகளுக்கு ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ பயன்பாட்டை படிப்படியாக அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம்.

“பெரிட்டோனியல் டயாலிசிஸ் சிகிச்சையை வீட்டிலேயே செய்ய முடியும் என்பதால் இது அதிக நீக்குப்போக்குத் தன்மைமிக்கதாக இருக்கிறது. மேலும் சில நோயாளிகள் தொடர்ந்து வேலைக்குச் செல்லவும் தங்கள் குடும்பங்களைக் கவனிக்கவும் இது வழிவகுக்கிறது,” என்றும் அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்